திருப்பூர்,
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் முகாமில் டாஸ்மாக் கடையை மூடிடக்கோரியும், குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்தக்கோரியும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்களன்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் கூட்டப்பள்ளி பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். குறிப்பாக, ஆழ்துளை குழாய்மின் மோட்டாரும் சரிவர இயங்குவதில்லை. இதுகுறித்து தனி அலுவரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஆகவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். காங்கயம், வீனம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் வழங்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் 200 குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பின் காரணமாக சுமார் 3 மாதங்களாக தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பஞ்சாயத்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, தண்ணீர் விநியோகத்தை சரிசெய்திட மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு
பல்லடம் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; பல்லடம் சின்னகோடாங்கிபாளையம் பகுதியானது தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் திடீரென டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கப்பட்டிருப்பதால் அனைத்து தரப்பினரும் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளோம். இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ள வழியாகத்தான் பள்ளி, கல்லூரிக்கு மாணவ, மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளதால் மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதனால் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையீடு செய்து டாஸ்மாக் கடையை நிரந்தமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சின்னியகவுண்டன்பாளையம் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; பல்லடம் வட்டம், சின்னியகவுண்டன்பாளையத்தில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விசைத்தறிகள் மற்றும் குடோன்கள் அமைந்துள்ளன. மேலும், அதே பகுதியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டிருப்பது மிகுந்த வேதனையையும், இன்னலுக்கும் உள்ளாக்கி உள்ளது. ஆகவே, குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட மதுக்கடையை மூடிட மாவட்ட ஆட்சியர் ஆவண செய்யுமாறு அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: