தாராபுரம்,
தாராபுரம் அருகே ஒப்புக்கொண்ட கூலியை கேட்டதற்காக தலித் தொழிலாளிகளை கடுமையாக தாக்கிய ஆதிக்க சாதியை சார்ந்த நபர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
துணை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வேலுமணியிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, தாராபுரம் வட்டம், மூலனூர், கிளாங்குண்டல் ஊராட்சி பனங்காட்டுவலசு கிராமத்தை சேர்ந்தவர் அருண். ஆதிக்க சாதியைச் சேர்ந்த இவர் தனது மாடுகளைமேய்ச்சலுக்கு விடுவதற்காக அதே ஊரில் வசிக்கும் தலித் சமுகத்தை சேர்ந்த மணி(40), ஆறுச்சாமி (50) என்பவரை வேலைக்கு அழைத்துள்ளார். அப்போது கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.500 தருவதாக அருண் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்பின் வேலை முடிந்தபிறகு கூலி பணம் கேட்டபோது, அருண் பேசியதற்கு மாறாக ரூ.200 மட்டுமே தந்துள்ளார். அதை வாங்க மறுத்த ஆறுச்சாமி, மணி ஆகியோரிடம் சாதியை இழிவாக பேசி தாக்கியுள்ளார். மேலும், கத்தியின் மூலம் ஆறுச்சாமியைதாக்கியதில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் மணியை பிடித்து கீழே தள்ளி அடித்து, உதைத்து கற்களால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் தற்போது தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே, ஏற்கனவே ஒப்புக்கொண்டபடிகூலியை கேட்ட ஒரே காரணத்திற்காக தலித் சமுகத்தை சேர்ந்த தொழிலாளர்களை சாதிய வன்மத்துடன் பேசி தாக்கிய அருணின் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தபுகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: