திருப்பூர்,
அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை கட்டி வாடகை வசூல் செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பூலுவபட்டி பொதுமக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது; திருப்பூர் மாநகராட்சி 2 ஆவது மண்டலத்திற்குட்பட்ட பூலுவபட்டி அரசு துவக்கப்பள்ளிக்கு அருகில் அரசுக்கு சொந்தமான 7,425 சதுரடி இடம் உள்ளது. இந்த இடத்தை அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்தும், கடைகளை கட்டியும் வாடகை வசூல் செய்து வருகிறார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதுதன்னுடைய பூர்வீக சொத்து என்று பொய்யான ஆவணங்களை காட்டினார். இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு வட்டாட்சியரிடம் மனு அளித்தோம். இதன்பின் அவர் ஆய்வு செய்தபோது, அவ்விடம் அரசிற்கு சொந்தமான இடம் என்பதை உறுதி செய்ததுடன், மேற்படி ஆக்கிரமிப்பு செய்த நபரையும், கிராம நிர்வாக அலுவரையும் எச்சரித்து ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வாய்மொழி உத்தரவுபிறப்பித்தார். ஆனால், இதுநாள்வரைஆக்கிரமிப்பு அகற்றப்படாததுடன், ஆக்கிரமிப்பு செய்த நபர் பொதுமக்களை மிரட்டி வருகிறார். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு அருகில் உள்ள அரசு பள்ளி விரிவாக்கத்திற்கு வழங்கவேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.