தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த நிலையில் தனது இரு குழந்தைகளை தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, தானும் தனது தாயுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தாராபுரம் அடுத்த உப்பாறு அணை அருகே உள்ள கெத்தல்ரேவ் கிராமத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவருக்கு மயிலாத்தாள் (70) என்ற மனைவியும், முத்துச்சாமி (38) என்ற மகனும் உள்ளனர். முத்துச்சாமிக்கு திருமணமாகி மனைவி செல்வி (28) மற்றும் மகள் ராஜலட்சுமி (11), மகன் மாணிக்க சத்தியமூர்த்தி (வயது 4) உடன் கெத்தல்ரேவில் உள்ள செட்டிதோட்டத்தில் வசித்து விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வந்தார். மகள் ராஜலட்சுமி தேர்ப்பாதையில் உள்ள அரசு பள்ளியில் 6 ஆம் வகுப்புபடித்து வருகிறார். 6 ஏக்கர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்த முத்துச்சாமிக்கு கடன் நெருக்கடி இருந்து வந்ததுடன், இவர் குடிப்பழக்கத்துக்கு ஆளானதாகவும் தெரிகிறது. இவரது மனைவி செல்வி அருகில் உள்ள பனியன் கம்பெனியில் சொற்ப கூலியில் வேலைக்குச் சென்று வந்திருக்கிறார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி செல்வி ரங்கபாளையத்தில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் ஞாயிறன்று அதிகாலை விவசாயி முத்துசாமி, அவரது அம்மா மயிலாத்தாள் ஆகியோர் தோட்டத்தில் உள்ள மரத்தில் பிணமாகத் தூக்கில் தொங்கினர். தோட்ட சாளையில் முத்துசாமியின் மகன் மாணிக்க சத்தியமூர்த்தி, மகள் ராஜலட்சுமி ஆகியோரும் தூக்கில் பிணமாகத் தொங்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த வேலுச்சாமி தனக்குத் தெரிந்தவர்களுக்குத் தகவல் கூறியிருக்கிறார். அப்பகுதியைச் சேர்ந்தோர் குண்டடம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர். காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தைகள் இருவர் உள்பட நான்கு பேர் உயிரை மாய்த்துக் கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இந்த கிராம மக்கள் கூறியதாவது: கடந்த சில வருடங்களாக உப்பாறு அணையில் தண்ணீர் இல்லாததாலும், மழை எதிர்பார்த்த அளவு பெய்யாததாலும் விவசாயம் செய்ய முடியாமல் வருமானமின்றி முத்துச்சாமி தவித்து வந்தார். இதனால் குடும்பம் நடத்த பணமின்றி கடன் வாங்கியுள்ளார். விவசாயத்தில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பிசெலுத்த முடியாமல் கடன்காரர்களின் நெருக்கடிக்கு ஆளாகி மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததுடன் குடும்பத்திலும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில்தான் விவசாயி முத்துச்சாமி தனது அம்மா மற்றும் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றனர். காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: