சென்னை,
தமிழக இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய உயர்வுகுறித்து பொய்யான தகவல்களை கூறிய தமிழக முதலமைச்சருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் ச.மயில் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு முதலமைச்சர் சேலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களைத் தரக்குறைவாகவும், கண்ணியக் குறைவாகவும், அவமரியாதையாகவும் பேசியுள்ள செய்தி தமிழ்நாட்டு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருங்கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு மாநிலத்தின் சக்திவாய்ந்த, அதிகார பலமிக்க, பொறுப்புணர்வுமிக்க பதவிவகிக்கும் முதலமைச்சரே இப்படிப் பேசியிருப்பது அந்த மாபெரும் பொறுப்பின் பெருமைக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சரின் பேச்சு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை இழிவுபடுத்திவிட்டது என்பதைவிட, அவர் வகிக்கின்ற பொறுப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றே சொல்லலாம். இதுவரை தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த மகத்தானமக்கள் செல்வாக்குப் பெற்ற முன்னாள் முதல்வர்கள் யாரும் பேசத்துணியாத வார்த்தைகளை இன்றைய முதலமைச்சர் அவர்கள் பயன்படுத்தி இருப்பது இதுவரை தமிழ்நாடு காணாத நிகழ்வாக அமைந்துவிட்டது. முதலமைச்சர், தனது பேச்சில் குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர்களை குறிவைத்து தாக்கியிருப்பது என்பது ஆசிரியர் பணியின் மேன்மையைக் களங்கப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் பணியாற்றும் 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி தலைமைஆசிரியர்களில் மாதம் ரூ. 82 ஆயிரம் ஊதியம் பெறும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கையை முதலமைச்சர் ஆதாரத்துடன் வெளியிட முடியுமா? கடந்த ஊதியக்குழு நடைமுறைப்படுத்தப்பட்டதில் மாதம் ரூ.40 ஆயிரம் ஊதிய உயர்வு பெற்ற ஒரு அரசு ஊழியர், ஆசிரியரையாவது ஆதாரத்துடன் தமிழக முதல்வரால் கூற முடியுமா? புதியதாக நியமனம் பெறும் தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மொத்த ஊதியமே வெறும் ரூ 23 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது என்பதை மறைத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ 48 ஆயிரம் ஊதியம் வழங்கப்படுவதாக கடந்த 2018 மே மாதம் அறிக்கை வெளியிட்டு வேதனைப்படுத்திய பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த அமைச்சரின் அறிக்கையைத் தொடர்ந்து முதலமைச்சரே இவ்வாறுபேசி வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சியிருப்பது எவ்வாறு ஏற்புடையதாகும்?

கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய அண்டை மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது என்பது முதலமைச்சருக்கு தெரியுமா? இப்படிப்பட்ட நிலையில் உண்மைக்கு மாறான செய்தியை முதல்வரே கூறி, பொதுமக்களுக்கு தவறான தகவல்களைக் கூறியதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: