காரகஸ்,
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை ஆள் இல்லாத விமானத்தில் வெடிகுண்டு நிரப்பிக் கொல்ல நடந்த சதியில் அவர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இந்தத் தாக்குதலில் அவரது பாதுகாப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடு வெனிசுலா. இங்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த ஹியுகோ சாவேஸ், கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்தபின், ஜனாதிபதியாக நிக்கோலஸ் மதுரோ பதவி ஏற்றார். சமீபத்தில் நடந்த தேர்தலிலும் நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெற்று 2-வது முறையாக ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பெரும் வன்முறையை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகள் அரங்கேற்றினார்கள். இந்நிலையில், தலைவர் காரகஸ்சில் ராணுவம், தேசியப்படைகளின் 81-வது ஆண்டு விழா சனிக்கிழமை நடந்தது. அப்போது ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் நேரலையில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென வானில் இருந்து சிறிய ரக ஆள் இல்லா குட்டிவிமானம் பறந்துவந்தது. அப்போது பேசிக் கொண்டிருந்த மதுரோ, அந்த விமானத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அந்த விமானம் திடீரென வெடித்துச் சிதறியது. இதைக்கண்ட மதுரோ அதிர்ச்சியில் உறைந்தார். விமானம் வெடித்துச் சிதறுவதைப்பார்த்ததும் ஜனாதிபதியின் தனிப்பாதுகாப்புப் படையினர் அவரைச் சூழ்ந்து கொண்டு அங்கிருந்து அவரைப் பாதுகாப்பாக வெளியேற்றி னார்கள். இந்த டிரோன் குண்டுவெடிப்பில் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இதுதொடர்பான வீடியோவையும் வெனி சுலா அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ ஊடகங்களிடம் பேசுகையில், “என்னைக் கொல்வதற்கு ஆள் இல்லா விமானம் மூலம் சதிநடந்துள்ளது. என் கண் முன்னே ஒரு பொருள் பறந்து வந்து வெடித்துச் சிதறியது. இதில் 7 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு கொலம்பியா நாடும், அமெரிக்காவின் சதியும் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்” எனக் குற்றம்சாட்டினார். வெனிசுலா ஜனாதிபதியின் குற்றச்சாட்டை கொலம்பியா அரசு மறுத்துள்ளது. ஆனால், அமெரிக்க அரசிடம் இருந்து எந்தவிதமான பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்:
வெனிசுலா ஜனாதிபதி, நிக்கோலாஸ் மதுரோ மீது கொலை முயற்சி மேற்கொள்ளப் பட்டிருப்பதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
“பொலிவாரிய தேசியப் படையின் 81ஆம் ஆண்டைக் கொண்டாடும்விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ராணுவ அணிவகுப்பில் ஜனாதிபதி மதுரோ உரையாற்றும் போது ஆளில்லா குட்டி விமானம் மூலம் படுகொலை செய்வதற்கு முயற்சி நடந்துள்ளது. அதில் அவர் தப்பியுள்ளார்.

இதுதொடர்பாக வெளிவந்திருக்கிற தகவல்களின்படி, வெனிசுலாவின் ஸ்திரத்தன்மையை பலவீனப்படுத்தி, சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டுவரும் முயற்சிகளுடன் இணைந்துள்ள அதிதீவிர வலதுசாரி கும்பல்கள்தான் இதனைச் செய்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இப்படு கொலை முயற்சியானது, வெனிசுலாவில் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி, சீர்குலைத்திடுவதற்காக, சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழுசாடியுள்ளது. ஜனாதிபதி மதுரோ மீது மேற்கொள்ளப் பட்டுள்ள படுகொலை முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் தலைமைக்குழு, அமெரிக்க ஏகாதிபத்தியம் தங்கள் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதை எதிர்த்து வரும், வெனிசுலாவையும் மற்றும் இதரலத்தீன் அமெரிக்க நாடுகளையும் பலவீனப்படுத்திட மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை உறுதியுடன் எதிர்த்து நிற்கும் ஜனாதிபதி மதுரோவுக்கும் வெனிசுலாவின் அனைத்து மக்களுக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தன்ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரி வித்து கொள்வதாக அரசியல் தலைமைக்குழு கூறியுள்ளது.

அமைதி ஒருமைப்பாடு அமைப்பு கண்டனம்:
இதேபோன்று, அகில இந்திய அமைதி மற்றும் ஒருமைப்பாடு அமைப்பும் (All India Peace and Solidarity Organisation) வெனிசுலா ஜனாதிபதி மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.