கோவை,
மோடியின் மோசடியான மக்கள் விரோத ஆட்சியை கண்டித்து சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை விளக்கி கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வாகனப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

ஆண்டுக்கு 2 கோடிப்பேருக்கு வேலை, வங்கி கணக்கில் ரூ.15 லட்சம், விவசாய பொருட்களுக்கு இரட்டிப்புவிலை, கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 200 நாள் வேலை என வாக்குறுதியளித்து மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்தது பாஜகவின் மோடி அரசு. அளித்த வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் இருக்கும் சிறு,குறு தொழில்களை அழித்தும், விவசாயிகளின் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும், ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து கார்ப்ரேட்டுகளுக்கு காவடி தூக்கும் மோடி அரசை விரட்டுவோம் என்கிற முழக்கத்துடன் சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆகஸ்டு 9 ஆம் தேதி நாடு முழுவதும் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகிறது. தொழிலாளர்கள் விவசாயிகள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் இச்சங்கங்களின் சார்பில் கோவையில் ஞாயிறன்று வாகன பிரச்சாரம் நடைபெற்றது.

சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் குன்னத்தூர் பகுதியில் துவங்கிய பிரச்சார பயணம் அன்னூர், ஒட்டர்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டது. இந்த பிரச்சார பயணத்தில் சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், நிர்வாகிகள் மனோகரன், இ.என்.ராஜகோபால் மற்றும் பழனிச்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் துடியலூர் பகுதியில் துவங்கிய மற்றொரு பிரச்சார இயக்கம் உடையாம்பாளையம், கணபதி பேருந்து நிலையம், இடையர்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் வழியாக பெரியநாயக்கன்பாளையத்தில் நிறைவடைந்தது. இக்குழுவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, வி.பெருமாள், எம்.அருணகிரிநாதன், ஆர்.வேலுசாமி, என்.செல்வராஜ், சி.துரைசாமி, கேசவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதன்தொடர்ச்சியாக இன்று ஒண்டிபுதூரில் துவங்கி காந்திபார்க், காந்திபுரம், பீளமேடு, சிங்கநல்லூர், இருகூர், சூலுர், கரும்பத்தாம்பட்டி, சின்னியம்பாளையம் வரையில் ஒரு குழுவும், ஆனைமலை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மலுமிச்சம்பட்டி, மதுக்கரை மார்க்கெட், சுந்தராபுரம், குனியமுத்தூர் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து ஆகஸ்டு 9ஆம்தேதியன்று கோவை மாநகரத்தில் காந்திபுரம் மற்றும் துடியலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, சூலூர் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள் பங்கேற்கின்ற மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.