திருப்பூர்,
இந்தியாவில் கல்விக்கான போராட்டம் புராண காலத்தில் இருந்தது தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்று உடுமலை புத்தகத் திருவிழாவில் வழக்கறிஞர் அருள்மொழி கூறினார்.

உடுமலை புத்தகாலயம் – திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 7ஆவது உடுமலை புத்தகத் திருவிழாவில் நான்காவது நாளான ஞாயிறன்று நடைபெற்ற நிகழ்வில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி பேசியதாவது: கல்விக்காக நீங்கள் குரல் கொடுத்தால் நீங்கள் கொல்லப்படுவீர்கள், நீங்கள் கொல்லப்படும் நாள்தான் எங்களுக்குத் திருவிழா என்ற செய்தியே புராணங்களில் உள்ளன. புராணங்களில் கடல், மலை, காடுகளில் ஒழித்து மறைத்து வைக்கப்பட்ட கல்வியை, அறிவை, புத்தகத்தை இப்போது சந்தையில் வந்து போட்டிருக்கிறோம். இதுதான் புத்தகச் சந்தை. எல்லா நாடுகளிலும் கல்விக் கொள்கை என்பதில் எல்லோருக்கும் கல்வி கொடுப்பது எப்படி என்பதுதான் முக்கியமானதாக இருக்கும். ஆனால் நம் நாட்டில் மட்டும்தான் எல்லோரும் படிக்கக்கூடாது என்று கல்விக் கொள்கையை தீர்மானிக்கின்றனர். யார் படிக்க வேண்டும் என ஒரு சிலர் தீர்மானிக்கின்றார்களோ அவர்கள் மட்டும்தான் படிப்பார்கள். ஏகலைவன், சம்புகன், நந்தனார் என கல்விக்காக இழந்தவர்கள் அதிகம். அந்த கல்விக்கான போராட்டம் நடத்துவதை நினைவு கூறுவதுதான் புத்தகச் சந்தை. கேள்வி கேட்காதே, கீழ்படி என்பதுதான் வேதப்புத்தகம், மதத்தின் கட்டளை. ஆனால் இல்லை கேள்வி கேட்போம் என்பதே மனிதனின் அடையாளம். அறிவுக்கனியை பெறுவதே மனிதனின் வாழ்வு. மானமும், அறிவும் மனிதருக்கு அழகு! நான்கு ஆண்டுகளில் பொது இடங்களில் 400 பேர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அச்சமின்றி யாரும் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களை வேறு எந்தவிதமான சிந்தனையும் இல்லாமல் வன்முறை மட்டுமே போதும் என்ற எண்ணம் கொண்டவர்களாக மாற்றுகின்றனர்.

புதிய கல்விக் கொள்கை, புதிய உயர்கல்விக் கொள்கை என ஆளுவோர் தங்களுக்கு ஏற்ப கல்வியை மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் இது குறித்து பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிலையங்களின் பேராசிரியர்கள் வலுவாக எதிர்ப்புக் குரல் எழுப்பவில்லை. ஊதியக்குழு கோரிக்கைகளைத் தாண்டி, மாணவர்களின் கல்வி குறித்து கவலைப்படுவோராக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஐந்தாம் வகுப்பு படித்த பிள்ளைகள் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால் அவர்களுக்கு மறுதேர்வு எழுதி தேர்ச்சி பெற வைக்க வேண்டும். ஆனால் இப்போது தோல்வி அடைந்தால் ஐந்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு தொழில் பயிற்சியாம், தொழிலாளர்களாக மாற்ற முயற்சி செய்கின்றனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் என உயர் கல்வி பெற்றவர்கள் பலர் ஒரு காலத்தில் பள்ளி படிப்புகளில் தோல்வி அடைந்து மறுதேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள். தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஏற்படவில்லை என்று அமார்த்தியாசென் சொல்கிறார். ஆனால் இங்கு எதுவும் இல்லை, தமிழகம் பாழாய் போய்விட்டது என்று பிரச்சாரம் செய்கின்றனர். பெண்கள் முன்னேற்றத்தில் முன்னோடியாக இருக்கும் மாநிலம் தமிழகம். உயர்நீதிமன்றத்தில் 12 பெண் நீதிபதிகள் இருப்பது உள்பட தமிழகம் பல முன்னேற்றங்களை அடைய காரணமாக, தடைகளைத் தகர்த்தது மானமும், அறிவும் என்ற இரு சொற்கள்தான்.

இந்திய பெண்கள் ஒரு நிமிடம் கூட நிம்மதியாக வாழ முடியாதவர்கள் பட்டியலில் மேலே போய்க் கொண்டே இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பாக நிம்மதியாக வாழக்கூடிய நாடாக இந்தியா இல்லை. ஆனால் பெண்களை போற்றும் நாடு நம் நாடு என்று சொல்லிக் கொள்கிறார்கள்.இப்போது நீங்கள் போராடக்கூடாது, பேசக் கூடாது, துண்டறிக்கை தரக்கூடாது, தட்டி வைக்கக் கூடாது என்று தடை விதிக்கிறார்கள். உலகம் முன்னேறி போய்க் கொண்டிருக்கும் போது இந்தியாவில் மக்களை பின்னுக்கு இழுக்கும் அரசாங்கம், ஆட்சியாளர்கள் இருக்கும்போது அதை எதிர்க்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இதை மாற்றி நாகரிக வாழ்வை அடைவதற்காக நாம் போராடுகிறோம். இப்படிப் போராடுவோர், மக்கள் மீது அக்கறை கொண்டவர்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்தும்போது நமக்கு பேராயுதமாக இருப்பது அறிவுதான். அதற்கு பயன்படுவதுதான் புத்தகம். வரலாற்றில் மறைக்கப்பட்ட, இருளில் தள்ளப்பட்ட பக்கங்களைக் காட்டுவது இந்த புத்தகங்கள்தான். இவைதான் மக்களை எழுச்சியூட்டும். இவ்வாறு அருள்மொழி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.