கோவை,
வால்பாறை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிடுவது என அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.

வால்பாறையில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 2002 ஆம் ரூ.76.85 தினக்கூலி பெற்றனர். இந்த நிலையில், சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக அவர்களது கூலி ரூ.4.85 குறைக்கப்பட்டது. ஊதிய நிலுவைத்தொகையை வழங்கக் கோரி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதுதொடர்பாக சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் முறையிடப்பட்டது. நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பாக தேயிலைத் தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, கோவையில் உள்ள தமிழ்நாடு தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்கள் சங்க அலுவலகத்தில் சனியன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு தலைமை வகித்தார். தோட்ட அதிபர்கள் தரப்பில் துணைத் தலைவர் பாலச்சந்தர், நிர்வாகிகள் மகேஷ்நாயர், பிரகாஷ் சங்கர், சதாசிவம், சட்ட ஆலோசகர் ராம்குமார், செயலர் பிரதீப்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர்கள் தரப்பில்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அனைத்து தொழிற்சங்க கூட்டுநடவடிக்கைக் குழுத் தலைவர் வால்பாறை வி.அமீது, தொழிற்சங்க நிர்வாகிகள் ஏஐடியுசி மோகன், எல்.பி.எஃப்.சுந்தர்ராஜ், சவுந்தரபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கேசவமருகன், ஐஎன்டியுசி கருப்பையா, மதிமுக கல்யாணி, சிஐடியு பரமசிவம், ஆனைமலை சங்க வர்க்கீஸ், காங்கிரஸ் எட்வர்டு உள்பட 29 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில் சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு பேசும்போது, விஷ ஜந்துகள் கடி உள்ளிட்ட பல்வேறு சிரமங்களைத் தாண்டி, தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ.1,500 வழங்க தோட்ட அதிபர்கள் முன்வர வேண்டும். அதேபோல, அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உதவ வேண்டும் என்றார். எனினும், தொழிலாளர்களின் கோரிக்கையான ரூ.1,500 வழங்க மறுப்புத் தெரிவித்த தோட்டஅதிபர்கள், ரூ.1,050 மட்டுமே வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். இதனால் இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இது தொடர்பாக தேயிலைத் தோட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசித்து, பின்னர் சென்னை தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிடுவது எனதொழிற்சங்க கூட்டுநடவடிக்கைக் குழு தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.