தொழிலாளர்கள் – விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் வரும் ஆகஸ்ட் 9 அன்று ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் நினைவாக, ‘மோடி அரசே வெளியேறு’ எனும் முழக்கத்துடன் நடத்திடவுள்ள சிறைநிரப்பும் போராட்டத்திற்கும், அதனைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 5 அன்று தலைநகர் புதுதில்லியில் நாடாளுமன்றம் நோக்கி நடத்திடவுள்ள மாபெரும் பேரணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தன் முழு ஆதரவினை அளித்துள்ளது. மோடி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் கோடானுகோடி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், மத்தியதர ஊழியர்கள் உள்பட ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து விட்டு அம்பானி, அதானி வகையறாக்களுக்கும், நாட்டைவிட்டு திட்டமிட்டுப் பறந்தோடியுள்ள சோக்சி வகையறாக்களுக்கும் தொண்டூழியம் செய்து வருகிறது.

உதாரணத்திற்கு, ரபேல் விமான ஒப்பந்தம். நாட்டின் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் (இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்) வசமிருந்து பறிக்கப்பட்டு இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் முன் அனுபவம் எதுவுமே இல்லாத அம்பானி குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்திடம் பல மடங்கு கூடுதல் தொகை ஒப்பந்தத்திற்கு விடப்பட்டிருக்கிறது. அதேபோல், நீரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் கடனாகப் பெற்றுக்கொண்டுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் அன்டிகுவா என்னும் நாட்டிற்குப் பறந்து சென்றுவிட்டார். அந்நாட்டின் குடிமகனாகவும் மாறிவிட்டார். இதே சோக்சி குறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வழக்கில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள அபிடவிட்டில் சோக்சி வெளிநாட்டிற்குப் பறந்து சென்றுவிடுவாரோ என்கிற சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. சந்தேகம் ஏற்பட்டு அவிடவிட் தாக்கல் செய்திருந்த போதிலும்கூட அவர் நாட்டை விட்டுத் தப்பி ஓட அனுமதிக்கப்பட்டிருக்கிறார். மோடி அரசாங்கத்திற்குத் தெரியாமல் இப்படித் தப்பிச் செல்ல வாய்ப்பே கிடையாது.

இது தொடர்பாக அன்டிகுவா நாட்டின் நீதிமன்றம் என்ன சொல்கிறது தெரியுமா?இந்தியாவில் சோக்சிக்கு எதிராக எவ்விதமான வழக்கும் கிடையாது என்று கூறிபாதுகாப்புத் தடை நீக்க சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும், அதனைப் பெற்றபின்னர்தான் அவருக்கு அன்டிகுவா நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது என்றும் கூறப்பட்டிருக்கிறது.இப்படி நாட்டைக் கொள்ளையடிப்பவர்களுக்கு உதவி செய்யும் மோடி அரசு, கோடானு கோடி தொழிலாளர்கள் – விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் – மத்தியதர ஊழியர்கள் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறது. எனவே ஆகஸ்ட் 9 சிறைக் கொட்டடிகள் நிறையட்டும். கார்ப்பரேட் மோடி ஆட்சிக்கு அது சாவுமணியாக இருக்கட்டும்.

Leave A Reply

%d bloggers like this: