திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு குடிபோதையில் வந்த முன்னாள் தொழிலாளி பணிவழங்கக்கோரி ஞாயிறன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பாலதண்டாயுதம். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தற்காலிக பணியாளராக பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில், குடி போதையில் பணிக்கு வருவது, ரேசன் கடையில் பொருட்களை கையாடல் செய்தது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டார். இதனால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த சில தினங்களிலேயே மீண்டும் குடிபோதையிலும், பொருட்களை கையாடல் செய்த காரணத்தால் கடந்த 8 மாதங்களுக்கு முன் விடுப்பில் இருக்கும் மாறு நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் கடந்த 2 மாதங்களுக்கு முன் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் தீக்குளிக்க முயன்றவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் ஞாயிறன்று காலை திருப்பூரில் உள்ள கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைக்கு குடி போதையில் வந்த பாலதண்டயுதம், தனக்கு பணி வழங்க வேண்டும் இல்லையெனில், சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும், இன்று மாலை 6 மணி வரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லையென்றால் தீக்குளிக்கப்போவதாக பெட்ரோல் கேனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். தகவறிந்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: