திருப்பூர்,
திருப்பூரில் வேலை செய்து கூலி பெற்றுக் கொண்டு வரும் வட மாநில கட்டுமானத் தொழிலாளர்களை வழிமறித்து சமூக விரோதிகள் பணம், செல்போன் போன்றவற்றை பறிக்கும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநாடு வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் ஞாயிறன்று மாவட்ட கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் திருப்பூர் மேற்கு கமிட்டி 12ஆவது மாநாடு சௌந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் இம்மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசினார். செயலாளர் எம்.பத்மநாபன் அறிக்கை முன்வைத்தார். இதன் மீது மாநாட்டில் பங்கேற்றோர் விவாதித்தனர். இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தை முறையாக செயல்படுத்தி, பணப்பயன் கிடைக்காதவர்களுக்கு உரிய பணப்பலனை விரைந்து வழங்கவும் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவர் சௌந்தரராஜன், செயலாளர் எம்.பத்மநாபன், பொருளாளர் சிவதாசன், துணைத் தலைவர்கள் அமுதா, காளீஸ்வரன், சண்முகம், துணைச் செயலாளர்கள் ஈசாக், சாகிப், மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இத்துடன் 12 பேர் நிர்வாகக்குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து சிஐடியு திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ் உரையாற்றினார். கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: