திருப்பூர்,
ஊத்துக்குளி தாலுகாவில் பணியாற்றும் முறைசாராத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற ஊத்துக்குளியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர வேண்டும் என்று சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊத்துக்குளி தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் 8ஆவது ஆண்டு பேரவை ஞாயிறன்று ஊத்துக்குளி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் துணைத் தலைவர் எம்.சந்திரன் இப்பேரவையைத் தொடக்கி வைத்தார். துணைத் தலைவர் கே.பெரியசாமி வரவேற்றார். வேலையறிக்கையை செயலாளர் பொறுப்பு வி.கே.பழனிசாமியும், நிதி அறிக்கையை பொருளாளர் சேகரும் முன்வைத்தனர். கட்டுமானத் தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் சி.மகேந்திரன் வாழ்த்திப் பேசினார். இதில் சங்கத் தலைவராக கே.பெரியசாமி, செயலாளராக வி.கே.பழனிசாமி, பொருளாளராக ஆர்.மணியன், துணைத் தலைவர்களாக ஆர்.குமார், கே.சாவித்திரி, துணைச் செயலாளர்களாக கே.எம்.சின்னசாமி, சேகர் ஆகியோரும், மொத்தம் 15 பேர் கொண்ட நிர்வாகக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

ஊத்துக்குளி தாலுகா அளவில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை கட்டித் தர வேண்டும், மாதஓய்வூதியம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கல்வி, திருமண உதவித் தொகைகளை உயர்த்தி வழங்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ உதவித் திட்டத்தில் சிறப்பு சிகிச்சை அளித்திட வழி செய்ய வேண்டும். இப்பேரவையின் முடிவில் சிஐடியு மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.கந்தசாமி நிறைவுரை ஆற்றினார். சங்கத் துணைத் தலைவர் கே.சாவித்திரி நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.