தாராபுரம்,
தாராபுரம் பேருந்து நிலைய இலவச கழிப்பிடத்தில் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசுகிறது. இதனை நகராட்சி நிர்வாகம் சரி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாராபுரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலில் இலவச கழிப்பிடம் உள்ளது. இதில் பெண் மற்றும் ஆண்களுக்கென்று தனித்தனியாக கழிப்பிடங்கள் உள்ளது. இக்கழிப்பிடம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. 8 மணிக்கு மேல் கழிப்பிடத்தை பூட்டி விடுவதால் பேருந்து நிலைய நுழைவு வாயில்பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தினசரி காலையில் நகராட்சி நிர்வாகம் இலவச கழிப்பிடத்தை சுத்தம் செய்வதாக கூறுகின்றனர். இந்த இரு கழிப்பிடங்களுக்கு ஒரே ஒரு தண்ணீர் தொட்டி மட்டுமே உள்ளது. இதில் தண்ணீர் தீர்ந்ததும் மீண்டும் தண்ணீரை நிரப்புவதில்லை. இதனால் காலை 9 மணிக்கே இலவச கழிப்பிட குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. தொடர்ந்து பயணிகள் இலவச கழிப்பிடத்தை பயன்படுத்துவதால் சிறுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கட்டண கழிப்பிடத்திற்கு பயணிகள் செல்லவேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சுகாதாரத்தை பராமரிக்காமல் நகராட்சி நிர்வாகம் மெத்தனமாக செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: