===வீ.பழனி===
மார்க்சிய பேராசான்களில் ஒருவரான பிரடெரிக் ஏங்கல்ஸ் நினைவு நாள் ஆகஸ்ட் 5!ஜெர்மனியில் ரைன் நதி பிரதேசத்தில் 1820 ஆம் ஆண்டு நவ28இல் பிறந்த ஏங்கல்ஸ் 1895 மே 5 அன்று தமது 75 வது வயதில் காலமானார்.மார்க்சால் ‘இன்னொரு நான்’ என்று கூறப்பட்டவர்.

தொழிற்புரட்சி என்ற சொல்லாடலை உருவாக்கியவர் ஏங்கல்ஸ்.பொதுவாக தொழிற்புரட்சி காலம் 1760 முதல் 830 வரை என்று கூறப்படுவது உண்டு.தொழிற்புரட்சி நடந்து பூர்சுவா வர்க்கமும் நவீன ஆலைத் தொழிலாளி வர்க்கமும் உருவான சமூகப் பின்னணியில் மார்க்சும் ஏங்கல்சும் பிறந்து வளர்ந்து வந்தனர்.

உலகின் முதல் அரசியல் இயக்கமான சாசன இயக்கம் தோன்றிய போது மார்க்சுக்கு வயது 19 ஏங்கல்ஸ் வயது 17.சாசன இயக்கம் கீழே கண்ட கோரிக்கைகளை வைத்துப் போராடியது 1)அனைவருக்கும் வாக்குரிமை. 2)ரகசிய வாக்கெடுப்பு.3)ஆண்டுதோறும் நாடாளுமன்றத் தேர்தல் 4)நாடாளுமன் உறுப்பினார்களுக்கு சம்பளம்.5)நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொத்து தகுதியை நீக்குதல் 6)அனைத்து தேர்தல் மாவட்டங்களையும் சமன்படுத்துதல்.

ஏங்கல்ஸ் பிறந்த ரைன் பகுதி பருத்தி மற்றும் கம்பளத் தொழில்களின் மையமாக இருந்தது. உலோகத் தொழில்களின் மையமாகவும் உருவாகி வந்தது.ஏங்கல்ஸ் குடும்பம் செல்வமிக்கது. ஏங்கல்ஸ் என்ற சொல்லுக்கு ஜெர்மனியில் பொருள் தேவதை. ஆங்கிலத்தில் உள்ள ஏஞ்சல்ஸ் என்ற சொல்லுக்கு ஈடானது.ஜவுளி தொழிலில் ஈடுபட்ட குடும்பம்.சொந்தமான ஜவுளி ஆலைகள் இங்கிலாந்து மான்செஸ்டரில் இருந்தன.

இந்த காலத்தில் ஜெர்மனியில் விஞ்ஞானத்திலும் தத்துவத்திலும் வளர்ச்சி ஏற்பட்டு வந்தது.மேலும் ரைன் பகுதி பன்னாட்டுத்தன்மை உடையதாக இருந்தது.மார்க்ஸ், ஏங்கல்ஸ் இருவரும் அப்போதைய ஜெர்மனியில் தலைசிறந்த தத்துவஞானியாக விளங்கிய ஹெகலின் ஆதரவாளர்களாக இருந்தனர்.இருவரும் இளம் ஹெகலியர்கள் குழுவில் இருந்தனர்.1844 ஆக 28 அன்று இருவருக்குமிடையேயான முதல் சந்திப்பு நடந்தது.அன்று முதல் மார்க்சின் மரணம் வரையில் இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர்.” விதி ஒன்று சேர்த்து வைத்த நாளில் இருந்து அவ்விரு நண்பர்களின் தனித்தனி வாழ்க்கை பணியும் அவ்விருவரின் பொது லட்சியமாகி விட்டது” என்கிறார் லெனின்.

“மனதை உருக்கும் நட்பு குறித்து பல உதாரணங்கள் காட்டும் பழங்கதைகள் உண்டு.தனது விஞ்ஞானத்தை சிருஷ்டித்தவர்கள் இரண்டு அறிஞர்கள்; இரண்டு போராட்ட வீரர்கள். அவர்களுக்கிடையே நிலவிய உறவு முன்னோர்கள் மனித நட்பு பற்றி எழுதியுள்ள நெஞ்சையள்ளும் கதைகளை எல்லாம் மிஞ்சக் கூடியதாக இருந்தது என்று ஐரோப்பிய பாட்டாளி வர்க்கம் பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம்” என்கிறார் லெனின்.
“மார்க்ஸ் உயிரோடு இருக்கும்போது அவர் மீது ஏங்கல்ஸ் வைத்திருந்த பாசத்துக்கும் மறைந்த மார்க்சின் நினைவு பற்றி அவர் வைத்திருந்த புனித மதிப்புக்கும் எல்லையே கிடையாது. இந்த கடின சித்தம் உள்ள போராட்ட வீரருக்கு கட்டுப்பாடு மிகுந்த சிந்தனையாளருக்கு ஆழ்ந்த அன்பு செலுத்தும் இதயமும் இருந்தது” என்று சொல்லிச் செல்கிறார் லெனின்.

3,10,000 பக்கம்
இரண்டு பேருடைய எழுத்துகளும் 40 தொகுப்பு நூல்களாகவும் 31000 பக்கங்களை உடையதாகவும் இருக்கிறது.இரண்டு பேரும் சேர்ந்து வெளியிட்ட முதல் நூல் வரலாற்று பொருள் முதல் வாதம் குறித்த ஜெர்மன் சித்தாந்தம் என்னும் நூலாகும். இந்நூல் வெளிவந்த ஆண்டு 1845.ஐரோப்பாவில் தோன்றிய முதல் பாட்டாளி வர்க்க அமைப்பாகிய கம்யூனிஸ்ட் லீகின் வேலைத்திட்டமான கம்யூனிஸ்ட் அறிக்கை இருவரும் சேர்ந்து எழுதி 1848 பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.இன்றளவும் உலகப் பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஒளிவிளக்காய் வழி காட்டி நிற்கும் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளிவந்த போது மார்க்சின் வயது 30 ஏங்கல்சின் வயது 28.

கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்படுவதற்கு அடித்தளமாக அமைந்த நூல் ஏங்கல்ஸ் எழுதிய “கம்யூனிசத்தின் கோட்பாடுகள்” ஆகும்.இன்றைக்கும் உலகின் தலைசிறந்த அரசியல் பொருளாதார அறிவுக்களஞ்சியமாகத் திகழும் மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867ல் வெளியானது.காரல் மார்க்சின் 30 ஆண்டு கால கடின உழைப்பின் பயனாய் இந்த நூல் வெளியானது. இந்த நூலின் இரண்டாவது மூன்றாவது தொகுதிகளை மார்க்சின் மறைவுக்குப் பின்பு ஏங்கல்ஸ் 11 ஆண்டுகள் அரும்பாடுபட்டு தொகுத்து எழுதி வெளியிட்டார்.
மார்க்ஸ் தனது கடைசி நாட்களில் தனது இளைய மகளிடம் ஏங்கல்ஸ் வேண்டுமானால் இந்த

ஆவணங்களைப் பயன்படுத்தி தான் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கலாம் என்று கூறினாராம்.மோசமான கையெழுத்து மட்டுமல்ல அவரே கண்டுபிடித்த சுருக்கெழுத்து மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதப்பட்ட குறிப்புகளைப் முறைப்படுத்தி இரண்டு தொகுதிகளாக ஏங்கல்ஸ் வெளியிட்டார். மூலதனம் நூலின் இந்த இரு தொகுதிகளும் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இரு மனிதர்களின் படைப்பாகும் என்கிறார் லெனின்.மூலதனத்தின் இரண்டாம் தொகுதி 1885 லும் ( மார்க்ஸ் 1883ல் மறைந்தார்) மூன்றாம் தொகுதி 1894 லும் (ஏங்கல்ஸ் 1895ல் மறைந்தார்) ஏங்கல்சால் வெளியிடப்பட்டது.

“இரண்டாவது மூன்றாவது தொகுதிகளை வெளியிட்டதின் மூலம் ஏங்கல்ஸ் தனது நண்பராகிய மேதைக்கு மாண்புமிக்க நினைவுச் சின்னம் நிறுவினார். அந்த நினைவுச் சின்னத்தில் தம்மை அறியாமலேயே தமது பெயரையும் அழியாத வகையில் பொறித்து விட்டார்” என்கிறார் ஆஸ்திரிய சமூக ஜனநாயகவாதி ஆட்லெர்.

ஏங்கல்சின் நண்பர்கள் அவரைப் பற்றி எழுதியுள்ளது வருமாறு:
“இயற்கை விஞ்ஞானத்தின் எந்த கிளையாக இருந்தாலும் சரி,எந்த கிளையின் எந்தப் பகுதியாக இருந்தாலும் சரி,அவை குறித்து ஏங்கல்சிடம் கேள்வி கேட்டால்அவர் எப்பொழுதும் புதிய கருத்துக்களைத் தருவார் “.

“ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பொருளாதார வரலாற்று அரசியல் இயக்கங்கள் பற்றி பொதுவான கோட்பாடுகளை மட்டும் அன்றி மிகவும் நுண்ணிய விபரங்களையும் கூட அறிவார்.”
“ஐரோப்பிய மொழிகளை மட்டுமின்றி அவற்றின் வட்டார வழக்குகள் குறித்தும் அவரிடம் நம்ப முடியாத ஞானம் இருந்தது” என்கிறார் பால் லபார்க். “அவருடைய நண்பர் காரல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கினார் “என்று சொல்கிறார் லெனின்.

தளபதி
ராணுவம் குறித்தும் அவருக்கு சிறப்பான புலமை இருந்தது.1870இல் பிரான்சுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த போர் குறித்து அவர் எழுதிய கடிதங்கள் பிரபலமானவை.மட்டுமல்லாமல் முதலாளித்துவத்திற்கு எதிரான பிரதம தளபதியான மார்க்சின் மறைவிற்கு பின்னர் அவர் சோசலிஸ்ட் படையின் தலைவராக இருந்து போராடியதாலும் மார்க்சின் புதல்விகளாலும் நண்பர்களாலும் தளபதி என்று அழைக்கப்பட்டு வந்தார்.

அவரது தனிப்பட்ட குணாதிசயங்களைப் பொறுத்தமட்டிலும் அவர் தோற்றத்தில் விசேஷ கவனம் செலுத்துவார்.எப்பொழுதும் நேர்த்தியான சுத்தமான ஆடைகளை அணிவார். மிகவும் சிக்கனமானவரும் கூட.அதே நேரத்தில் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சளைக்காதவர். மார்க்சின் குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே தனக்கு சிறிதும் பிடிக்காத தொழில் வர்த்தக பணிகளை குறிப்பிட்ட காலம் மேற்கொண்டு வந்தார்.
“அவர் வாழ்ந்த காலத்தின் மிகவும் தலைசிறந்த மனிதர் என்று கருதுகிறேன். கலைக்களஞ்சியம் போன்ற படிப்பாற்றலையும் எல்லா விஞ்ஞான துறைகளிலும் பெரியளவு நவீன ஞானத்தையும் அவர் பெற்றிருந்தார் ” என்கிறார் ஏங்கல்சின் உற்ற நண்பர்களில் ஒருவராகிய ஏர்னஸ்ட் பாக்ஸ்.
மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவருக்கும் தந்தையர் நாடு (தாய் நாடு) கிடையாது. அவர்கள் இருவரும்

உலக பிரஜைகள்!

மாமேதை ஏங்கல்ஸ் நாமம் நீடூழி வாழ்க!

கட்டுரையாளர் : வீ. பழனி,சிபிஎம் நெல்லை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்

Leave a Reply

You must be logged in to post a comment.