தேனி;
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளும் வகையில், அணை பலமாக இருப்பதாக கண்காணிப்புக்குழு தலைவரும் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளருமான குல்சன்ராஜ் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, கடந்த 2014 மே 7 இல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் என்.ஏ.வி. நாதன் தலைமையில் மூவர் குழுவை நியமித்தது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளரான குல்சன்ராஜ் உள்ளார். இந்த குழுவில் தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறையின் கூடுதல் அரசு செயலர் பிரபாகரன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வள ஆதார அமைப்பின் அரசு செயலர் டிங்கு பிஸ்வால் ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவினர் கடந்த ஆண்டு நவம்பர் 14 அன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு 136 அடி வரை உயர்ந்தது. இதைத்தொடர்ந்து பருவ மழைக்காலங்களில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அணை பாதுகாப்பு குறித்தும் அணையின் உறுதித்தன்மை குறித்தும் இக்குழுவினர் சனிக்கிழமையன்று அணைப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

முன்னதாக தலைவர் குல்சன்ராஜ் மற்றும் தமிழக, கேரள அதிகாரிகள் வள்ளக்கடவு வழியாக பெரியாறு அணைக்குச் சென்றனர். அங்கு மெயின் அணை, பேபி டேம், கேலரிப்பகுதியை பார்வையிட்டனர். ஆய்வின்போது, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியன், தலைமைப்பொறியாளர் செல்வராஜ், துணை கண்காணிப்புக்குழு தலைவர் ராஜேஷ், பெரியாறு அணை செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரளா நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் சோனி தேவஸ்யா, உதவிப் பொறியாளர் பிரசீத் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டம்
பின்னர் சனிக்கிழமையன்று மாலையில் இக்குழுவின் ஆலோசனைக்கூட்டம் குமுளியிலுள்ள கண்காணிப்புக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் குழு தலைவர் கூறுகையில், பெரியாறு அணை பலமாக உள்ளது. அணையின் கசிவுநீர் அணை நீர்மட்ட அளவிற்கு சரியாக உள்ளது. இம்முறையும் அணையில் 142 அடி தண்ணீர் தேக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வள்ளக்கடவு பாதையும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. வரும்காலங்களில் அது சீரமைக்கப்படும். பேபி அணை பலப்படுத்தப்படும். அதன்பின்னர் 152 அடி தண்ணீர் தேக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றார். தமிழக பொதுப்பணித்துறையின் புதிய, தமிழன்னை படகுக்கு நான்கு ஆண்டுகளாக கேரளா அனுமதி கொடுக்காமல் இருப்பது பற்றி கேட்ட போது, படகுக்கு அனுமதி பெறுவது எங்கள் வேலை அல்ல என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.