திண்டுக்கல்:
நாடாளுமன்றத் தேர்தலில் நாளை நமதே நாற்பதும் நமதே என்று அதிமுக மூத்த நிர்வாகியும் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை அரசு விழாவில் பேசினார். நாடாளுமன்ற தேர்தலில் தனித்த போட்டியா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது நழுவிச்சென்றார். மேடையில் ஒருவிதமாகவும் பேட்டியில் ஒருவிதமாகவும் உளறல் தன்மையிலேயே தம்பிதுரையின் பேச்சு இருந்தது என்று நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கூறினர்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே கல்வார்பட்டியில் சனிக்கிழமையன்று நடைபெற்ற ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழாவில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என்று பேசினேன். பிறகு கட்சி முடிவெடுப்பது என்பது வேறு. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா தனித்து போட்டியிட்டார். 37 இடங்களில் வெற்றி பெற்றார்.

தனித்து நின்றாலும் சரியே, தலைமை முடிவெடுத்து கூட்டணியாக நின்றாலும் சரியே, கட்சி தலைமைதான் முடிவெடுக்கும். எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்று அம்மா எங்களுக்கு கற்றுத்தந்திருக்கிறார்கள். உலகளாவிய பிரச்சனையில் தமிழக அரசு சிபிஐ விசாரணை கேட்பது சரியானது. பொன்மாணிக்கவேல் மோசம் என்று சொல்லவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் பேசக்கூடாது என்றார்.

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி, ஊழல் ஆட்சி என கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, டென்சன் ஆன தம்பித்துரை உளறிக்கொட்டுகையில், ராகுல்காந்தி, பாஜககாரர்களும் கூட சொல்கிறார்கள் தமிழகத்தில் ஊழல் அதிகமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் சொல்லும். அமித் ஷா எங்கள் கட்சியின் கூட்டணியா? ராகுல் காந்தி, பாஜக ஊழல் கட்சி என்கிறார். எதிர்க்கட்சி தலைவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். பிரதமரோ மற்ற அமைச்சர்களோ சொன்னால் நீங்கள் கேட்கும் கேள்வி நியாயம். எந்த மத்திய அமைச்சராவது ஊழல் ஆட்சி என்று சொல்லியிருக்கிறார்களா?
பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் சொல்லியிருக்கிறாரே என்ற கேள்விக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கேபினட் மினிஸ்டர் இல்லை. அவர் அரசியல் கட்சியைச் சார்ந்தவர். அவர் இணை அமைச்சர் தான். கேபினட் அமைச்சர் சொல்லியிருக்கிறார்களா? லோக்கல் பாலிட்டிக்சுக்காக சொல்கிறார்கள். எங்கள் ஆட்சி ஊழல் ஆட்சி கிடையாது. நல்லது செய்தால் மக்களுக்கு கண்ணை உறுத்தும். ஸ்டாலின் ஊழல் கட்சி என்கிறார். கம்யூனிஸ்ட் கட்சி ஊழல் கட்சி என்கிறார்கள். ராமதாஸ், வைகோ சொல்கிறார்கள். அதே போல் தான் அமித் ஷாவும் சொல்கிறார் அவ்வளவு தான்.

விஜயபாஸ்கரை சங்கடத்திற்குள்ளாக்கிய தம்பிதுரை
 ஊழல் ஆட்சி இல்லை என்றால், பிறகு எதற்கு தமிழகத்தில் அதிகமான ரெய்டுகள் நடைபெறுகிறது என்ற கேள்வி நிருபர்கள் தரப்பில் எழுப்பப்பட்டது. அப்போது பதில் அளித்த தங்கதுரை:

எங்கே ரெய்டு நடக்கிறது. அமைச்சர் சீனிவாசன் வீட்டில் ரெய்டு போனார்களா? அல்லது என் வீட்டில் ரெய்டுக்கு வந்தார்களா? யார் வீட்டில் ரெய்டுக்கு போனார்கள். (அப்போது அருகில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உடன் இருந்தார். அவர் இந்த கேள்வி மற்றும் பதிலால் சங்கடத்திற்குள்ளானார்). இந்தியா முழுவதும் ரெய்டு நடக்கத்தான் செய்யும். கர்நாடகாவில், மத்தியப்பிரதேசத்தில் என பல மாநிலங்களில் ரெய்டு நடந்து கொண்டிருக்கின்றன என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.