ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லாவின் வீடு ஜம்முவில் உள்ளது. ஜம்மு நகரில் உள்ள பதிண்டி பகுதியில் இருக்கும் பரூக் அப்துல்லாவின் வீட்டை நோக்கி இன்று காலை கார் ஒன்று வேகமாக  வந்தது. அங்கிருந்த காவல் துறையினரின் பாதுகாப்புகளை தாண்டி அத்துமீறி நுழைந்த அந்த கார், பரூக் அப்துல்லாவின் வீடு வளாகத்தில் இருந்த சில பொருட்கள் மீது மோதி சேதப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த சி.ஆர்.பி.எப் போலீசார், காரை ஓட்டி வந்த நபரை சுட்டுக்கொன்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட நபரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும், எதற்காக அத்துமீறி நுழைந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இசட் பிளஸ் பாதுகாப்பு கொண்ட பரூக் அப்துல்லா, இந்த சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து, பரூக் அப்துல்லாவின் மகனும் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள பதிவில், ஜம்முவின் பதிண்டி பகுதியில் உள்ள எனது தந்தையின் இல்லத்தில் நடைபெற்ற சம்பவம் பற்றி நான் கேள்விப்பட்டேன். தற்போதைக்கு  தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.