புதுதில்லி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில், பாஜக-வின் இளைஞர் அமைப்பினர் தன் மீது நடத்திய தாக்குதல் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என சுவாமி அக்னிவேஷ் வலியுறுத்தியுள்ளார்.

ஹரியானா மாநில முன்னாள் எம்எல்ஏ-வான அக்னிவேஷ், இந்துத்துவா அரசியலுக்கு எதிராக தொடர்ந்து பேசி வந்தார். மாட்டிறைச்சி விஷயத்திலும் இந்துத்துவா கும்பலுக்கு எதிரான நிலைபாட்டைக் கொண்டிருந்தார். இந்நிலையில், அவர் பாஜக-வுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களை தூண்டிவிடுவதாக கூறி பாஜக இளைஞர் அமைப்பினர், கடந்த ஜூலை 17-ஆம் தேதி அக்னிவேஷை கடுமையாகத் தாக்கினர்.ஜார்க்கண்ட்டில் சுவாமி அக்னிவேஷ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த நிலையில், பாக்கூர் என்ற இடத்தில், பாஜக-வினர் அவருக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். பின்னர் ஒருகட்டத்தில் அக்னிவேஷ் மீது சரமாரியான தாக்குதலையும் நடத்தினர்.
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு சுவாமி அக்னிவேஷ் படுகாயம் அடைந்தார்.

இந்நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ள சுவாமி அக்னிவேஷ், “என் மீதான தாக்குதல் சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை; விசாரணையும் நடைபெறவில்லை; இதிலிருந்தே இச்சம்பவம் மூடி மறைக்கப்படுகிறது என்பதை அறியலாம்; எனவே, இச்சம்பவத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்று நான் உச்ச நீதிமன்றத்தை நாடுவதைத் தவிரவேறு வழியில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.