ஈரோடு;
அறம் சார்ந்த வாழ்க்கை முறையை தெரிந்து கொள்ளும் வகையில், பள்ளிப்பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் த.உதயசந்திரன் கூறினார்.
ஈரோடு, வ.உ.சி. மைதானத்தில் மக்கள் சிந்தனைப் பேரவை புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் த.உதயசந்திரன் பேசியதாவது:
வருங்காலத் தலைமுறையினர் எப்படி இருக்க வேண்டும்.

எப்படி வர வேண்டும் என்பதைக் கணித்து, அதனைப் பாடப் புத்தகங்களாகக் கொண்டு வந்துள்ளோம். அடித்தட்டு மக்களைக் கருத்தில் கொண்டு, சான்றாதார அடிப்படையில் தமிழ்ச் சமூகப் பெருமிதம், பாலின சமத்துவம் போன்ற பல்வேறு கருத்துகள் இந்தப் பாடத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன. பள்ளிக்கு முதன்முதலாக வரும் குழந்தைகளை மிரட்சியில் இருந்து மீட்கும் வகையில், முதல் 15 நாள்கள் ஆடல், பாடலுடன் வகுப்பறைகள் அமைய வேண்டும் என்பதற்காக மனமகிழ் பக்கங்களைக் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில், பாடப் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்ச் சமூகம் மறந்துவிட்ட கூட்டுக் குடும்பத்தையும் அறம் சார்ந்த வாழ்க்கை முறை போன்றவற்றை தெரிந்து கொள்ளும் வகையில், மென்மையாகப் பாடத்தில் குறிப்பிட்டுள்ளோம்.
குழந்தைக்கு தாய், தந்தையின் பெயரை இணைத்து முகப்பெழுத்தில் குறிப்பிட வேண்டும் என்ற கருத்தையும் விதைத்துள்ளோம். பெண்ணியக் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்த விவரமும், அது தொடர்பான இணைய விவரங்களும் ‘கியூ.ஆர்.’ என்ற விரைவுக் குறியீடு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு சிக்கலும் ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகின்றன. இன்னும் நான்கு ஆண்டுகளில் அகில இந்திய அளவில் தமிழக மாணவர்கள் பெரும் சாதனையைப் படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.