வருவாய் ஈட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வாட்ஸ்அப் தயாராகி வருகிறது. இதற்காக, வணிக நிறுவனங்களுடன் இணைவதற்கான திட்டங்களை அது தீட்டிவருகிறது. தற்போது, வங்கிகள், பயணச்சீட்டுப் பதிவுகள் உள்ளிட்ட பலவகைச் செய்திகளும் குறுஞ்செய்திகளாக அனுப்பப்பட்டு வருகின்றன. சில நிறுவனங்கள் இதற்கு வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. இதனை வணிகரீதியாகப் பயன்படுத்திக்கொள்த் திட்டமிட்டுவருகிற வாட்ஸ்அப் நிறுவனம், சோதனை முயற்சியாக புக் மை ஷோ, கோட்டாக் மகிந்திரா வங்கி, ரெட் பஸ் ஆகிய நிறுவனங்களை அதிகாரப்பூர்வமாக அனுமதித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு வணிக நிறுவனங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு தற்போது 10 காசு செலவாவதாகக் கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கும் அதிகமான செய்திகள் இவ்வாறு அனுப்பப்படும் நிலையில், அவற்றை, குறைந்த கட்டணத்தில் வாட்ஸ்அப் மூலம் அனுப்ப அனுமதிக்க வாட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. குறுஞ்சசெய்தியைப் போலன்றி, செய்தி கிடைத்துவிட்டதற்கும், படிக்கப்பட்டதற்கும் ஒப்புகை கிடைத்துவிடுவதோடன்றி, வாடிக்கையாளர்களுக்கு சந்தேகமிருந்தால், அதிலேயே எழுப்பி பதிலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது கூடுதல் வசதியாகும். அத்துடன், வாடிக்கையாளர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு, நிறுவனங்கள் பதிலளிக்க கால அவகாசத்தையும் நிர்ணயித்து, ஒரு நாளைக்குள் பதிலளிக்காத நிறுவனங்களிடம் வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

மேலும், தற்போது நம் படங்கள், வீடியோ முதலானவற்றை அனைவரும் காணும் வகையில் அமைக்க உதவும் ஸ்டேட்டஸ் என்ற வசதியில், வணிக நிறுவனங்களின் விளம்பரங்களை 2019இலிருந்து அனுமதிக்கவும் வாட்ஸ்அப் திட்டமிட்டு வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.