ஃபேஸ்புக்கிலும், இண்ஸ்டாகிராமிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பதைக் கணக்கிடவும், நாம் விரும்பினால் அவ்வாறு செலவிடும் நேரத்தைக் குறைப்பதற்கும் வசதிகளைச் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் திட்டமிட்டுவருகிறது. எவ்வளவு நேரமாகியிருக்கிறது என்று எச்சரிக்கவும், குறிப்பிட்ட நேரத்திற்கு அறிவிப்புகளை நிறுத்தி வைத்துக்கொள்ளவும் வசதிகள் செய்யவிருப்பதாக ஃபேஸ்புக் கூறியுள்ளது.

வழக்கமாக, தங்கள் தளத்தில் அல்லது செயலியில் அதிகம் பேர், அதிக நேரம் இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் விரும்புகிற நிலையில், இணையத்தில் அளவுக்குமீறி செலவிடப்படும் நேரம், மக்களின் உடல்நலம், மனநலம் ஆகியவற்றில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து ஏற்பட்டுவரும் விழிப்புணர்வுகள், ஃபேஸ்புக் நிறுவனத்தை இவ்வாறு திட்டமிடச் செய்திருக்கிறது. இதற்காக இணையப் பாதுகாப்பு நிபுணர்கள், ஆய்வாளர்கள், இளைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்ட ஆய்வு மாநாடு ஒன்றை மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் நடத்தியபின், இந்த முடிவுக்கு வந்துள்ளது.

ஏற்கெனவே, ஐபோனில், ஒவ்வொரு செயலியிலும் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்று சுட்டிக்காட்ட, திரை நேரம் என்ற வசதியை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதைப்போன்ற ஒரு வசதியை அறிமுகப்படுத்தவிருப்பதாக கூகுள் நிறுவனமும் அறிவித்துள்ளது. இணைய தளங்கள், செயலிகள் ஆகியவற்றின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டினால் ஏற்படும் கேடுகள் குறித்து, அந்த நிறுவனங்களே எச்சரிக்கை விடுக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.

Leave A Reply

%d bloggers like this: