புதுதில்லி, ஆக.3-

புல்லட் ரயில் திட்டம் என்பது கொடுங்கோலாட்சியாளர்களின் தற்புகழ்ச்சி திட்டமே தவிர வேறல்ல என்றும், இத்திட்டம் இந்தியாவை மேலும் கடன்வலையில் தள்ளிவிடும் என்றும், இதனை ரத்து செய்திட வேண்டும் என்றும் விவசாயிகள் – தொழிலாளர்களின் கூட்டமைப்பான பூமி அதிகார் அந்தோலன் கோரியுள்ளது. இக்கோரிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளன.

பூமி அதிகார் அந்தோலன் சார்பாக புதுதில்லி, கான்ஸ்டிட்யூசன் கிளப்பில் வியாழன்று, புல்லட் ரயில் – அதன் திட்டச் செலவினமும் மோசமான விளைவுகளும் என்கிற தலைப்பில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றார்கள்.

இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான இதற்கு, குஜராத் மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும், இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மக்கள் இயக்கத்தின் தேசியக் கூட்டணி அளித்திட்ட அறிக்கையின் முக்கியமான நான்கு அத்தியாயங்கள் விடுபட்டிருப்பதை விமர்சித்தும் கருத்துக்கள் கூறப்பட்டன.

இவ்வாறு விடுபட்ட அறிக்கையில் புல்லட் ரயில் திட்டத்தின் செலவினங்கள், அமலாக்கத் திட்டம், அதற்கான நிதி ஆதாரங்கள் மற்றும் பொருளாதாரம் குறித்த ஆய்வுகள் அலசப்பட்டிருந்தன., இந்த அறிக்கைக்கு மும்பை – அகமதாபாத் உயர் வேக ரயில் (புல்லட் ரயில்) என்று பெயரிடப்பட்டிருந்தது. இப்போது அரசுத்தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் இதற்கான செலவினங்கள் குறித்தோ மக்களுக்கு இதனால் ஏற்படும் நிதிச் சுமை குறித்தோ எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டது.

இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துகையில் 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மேலும் இந்த அறிக்கையானது இத்திட்டம் குறித்த விவரங்களையும் வெளிப்படுத்திடவில்லை.

இது தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் ஒருவர் கோரியபோது, “இது வர்த்தகப் போட்டியைப் பாதித்திடலாம்,”  என்றும் எனவே ‘ரகசியம்’ கடைப்பிடிக்கப்பட வேண்டியிருக்கிறது எனக்கூறி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தர மறுத்துவிட்டனர்.

புல்லட் ரயில் திட்டம் 2023 ஆகஸ்ட் 15இல் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. சமூகத்திலும் சுற்றுச்சூழலிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக 2013 நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது மக்களின் வாழ்வாதாரங்களின் மீது கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகும். ஆனாலும் ஆட்சியாளர்கள் இதைப்பற்றி யெல்லாம் கவலைப்படவேயில்லை. எனினும், இது தொடர்பாக ஆய்வு செய்யப்படுவதையும், கையகப்படுத்தும் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது. மக்களுக்குத் தேவையற்ற மற்றும் அவசியமற்ற இத்திட்டத்தினை எதிர்ப்பதைத் தொடர்வது என்றும் இக்கூட்டம் முடிவு செய்தது.

இக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அசோக் தாவலே, ஹன்னன்முல்லா, விஜு கிருஷ்ணன், மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உரையாற்றினார்கள்.

அரசியல் கட்சிகள் சார்பில் முகமது சலீம், ஜிதேந்திர சௌத்ரி (சிபிஎம்), து.ராஜா (சிபிஐ), பிரேம் சிங் (சிபிஐஎம்எல்), ஜெய் கரன் மற்றும் ரமேஷ் ஷர்மா (எஸ்யுசிஐ), நசீர் உசேன் (காங்கிரஸ்),  டி.பி.திரிபாதி (தேசியக் காங்கிரஸ்), மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்) முதலானவர்கள் உரையாற்றினார்கள்.

(ந.நி.)

 

Leave a Reply

You must be logged in to post a comment.