பாட்னா, ஆக.2-

பீகார் மாநிலம் முசாபர்பூரில் குழந்தைகள் தங்குமிடத்தில் வைக்கப்பட்டிருந்த 34 இளம் சிறுமிகள் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்தும், தலித்துகள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்திருப்பதைக் கண்டித்தும், இடது சாரிக் கட்சிகள் விடுத்திருந்த பீகார் பந்து இன்று (வியாழக்கிழமை) முழு வெற்றி பெற்றுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), எஸ்யுசிஐ, புரட்சி சோசலிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகிய இடதுசாரிக்கட்சிகள் இந்த பந்த்திற்கு அறைகூவல்விடுத்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்காத ராஷ்ட்ரிய ஜனதா தளம்  உட்பட அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்தன.

இன்று நடைபெற்ற பந்த்திற்கு மக்கள் அமோகமான அளவில் ஆதரவு தெரிவித்தனர். கடைகள், உணவு விடுதிகள், பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்தன. சாலை மற்றும் ரயில் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டன.

பந்த் நடைபெறும் இன்றைய தினம் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் பேரணி நடத்திடவும் திட்டமிட்டிருந்தனர். அதன்படி தலைநகர் பாட்னாவில் காந்தி மைதானத்திலிருந்து மாபெரும் பேரணி புறப்பட்டுச் சென்றது. காவல்துறையினர் சாலைகளில் தடுப்புச்சுவர்களை ஏற்படுத்தி இருந்தனர். அதனையும் மீறி பேரணி சென்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராம்பாரி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத் தலைவர் தாக்கப்பட்டார்கள். எனினும் தாக்குதலைப் பொருட்படுத்தாமல் அவர்கள் பேரணியை டாக் பங்களாவை நோக்கித் தொடர்ந்தார்கள்.

பின்னர் அங்கே நடைபெற்ற கூட்டத்தில் சிபிஎம் மாநில செயலாளர் அவதேஷ் குமார் உட்பட இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

(ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.