ஹராரே;
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 50.8 சதவீத வாக்குகளை பெற்ற நங்கக்வா, புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவரது கட்சி அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் 37 ஆண்டு காலம் கொடி கட்டிப்பறந்த ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு ராணுவக் கலகம் வெடித்தது. இதனால், முகாபேவின் பதவி பறிக்கப்படுகிற நிலை உருவானது. இதையடுத்து, தாமாக முன்வந்து சென்ற நவம்பர் மாத இறுதியில் அவர் பதவி விலகினார்.

முகாபே பதவி விலகலை தொடர்ந்து அவரது ஜானு – பிஎப் கட்சியின் துணைத்தலைவரான எம்மர்சன் நங்கக்வா ஜனாதிபதி ஆனார். அந்நாட்டில் மொத்தம் உள்ள இடங்கள் 270 என்றாலும் 210 இடங்களுக்குத்தான் நேரடி தேர்தல் நடத்தப்படும். மீதி இருக்கும் 60 இடங்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்நிலையில், கடந்த ஜூலை 30-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு நடைபெற்ற வன்முறையினால் தாமதத்திற்கு பிறகு பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில், ஆளும் ஜானு-பி.எப். கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளில் 140 இடங்களில் அந்த கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெல்சன் சாமிசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான எம்.டி.சி, 58 இடங்களைப் பிடித்துள்ளது.
இதனால், ஜானு-பி.எப். கட்சி மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்று தனிப்பெரும் கட்சியாக விளங்குகிறது. இதையடுத்து 50.8 சதவீத வாக்குகளை பெற்ற நங்கக்வா ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஆளுங்கட்சி அடக்குமுறையைக் கையாள்வதாக கூறி எதிர்க்கட்சியினர் புதனன்று தலைநகர் ஹராரேவில் கற்களை வீசிப் போராட்டம் நடத்தினர். அவர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசினர். தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடத்தினர்.இந்த வன்முறையில் 6 பேர் உயிரிழந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் இருந்த நிலையில், ஹராரேவில் இப்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.