மன்னார்குடி மேலப்பாலத்திலிருந்து திருவாரூர் மாநில நெடுஞ்சாலையை இணைக்கும்  பை பாஸ் சாலையில் இருக்கிறது கர்த்தநாதபுரம்.  நகரின் வடக்கே கிருத்துவ மக்கள் அதிகம் உள்ள இந்த கர்த்தநாதபுரம் மற்றும் இதை ஒட்டிய பகுதிகள் நகரத்தின் 3வது மற்றும் 5-வது வார்டில் உள்ளன. இந்த  கர்த்தநாதபுரத்தின் தென்புறம்  பாமனி ஆறு ஓடுகிறது.. கர்த்தநாதபுரம் மற்றும்  3வது 5வது வார்டு பகுதிகளையும்  ஆற்றின் தென்கரையில் உள்ள 4வது வார்டு மற்றும் நகரப் பகுதிகளை  ஆற்றின் குறுக்கே சுமார் 100 மீட்டர் நீண்டு செல்லும் ஒரு நடைபாலம்.  இணைக்கிறது இந்தப் பாலம் வழியாக ஆற்றைக் கடந்து நடந்தால் பத்து நிமிடத்தில்  பேருந்துநிலையம், தலைமை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் வட்டவழங்கு அலுவலகம், காவல் நிலையம் நீதிமன்றங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களை அடையலாம். இந்த நடைபாலத்தை  தவிர்த்துவிட்டு செல்லவேண்டுமென்றால்  சுமார் 4 கிமீ தூரம் கூடுதலாக ஊர் சுற்ற வேண்டிவரும். இப்படி நகரத்தின் மையப்பகுதியை  இணைக்கும் இந்த நடைபாலம்தான்  இப்போது அபாயகரமான நிலையில் உள்ளது. இந்த நடைபாலம் கட்டி அறுபது  ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. முற்றிலும் கம்பி இரும்பு ராடுகளையும் நடப்பதற்கு சிமெண்ட் கான்கிரீட் ஸ்லாபுகளையும் கொண்ட இந்த பாலம் பராமரிப்பின்றி மணல் புதையுண்ட   ஆழப் பகுதியில் இரும்பு ராடு துருப்பிடித்து  இற்றுக்கிடக்கிறது. கான்க்கரீட் ஸ்லாபுகள் ஒன்றுக்கொன்று விலகிக்கிடக்கின்றன. நடக்கும்போது ஆடுகின்றன. . . பெரு மழை பெருங்காற்று காலங்களில் வயல்களின் வடிகால்கள் கொண்டு வந்து சேர்க்கும் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுக்கும்போது பாலத்தின் நின்று பார்த்தால் இந்த பாலம் எத்தனை பேரை காவு வாங்கப்போகிறதோ என்ற கவலையும்  அச்சமும்  வருகிறது. புதிதாக பாலம் கட்டாமல்  இப்படியே இருந்தால் நிச்சயம் ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என   இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.  .காலை 8 மணியிலிருந்து 9 மணிவரை இந்தப் பாலத்தின் வழியே நூற்றுக்கணக்கான   பள்ளிக்  கல்லூரி மாணவர்களை உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தினசரி   நகருக்குள் செல்கிறார்கள். .இதுபற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் குமார் கூறும்பொது கர்த்தநாதபுரம், அதைஒட்டிய பகுதிகள்  மன்னை நகர், மன்னார்குடிக்கு வடக்கே பாமனி வெள்ளங்குழி, உள்ளுர் வட்டம் மேலத்தெரு உடையார் தெரு செருமங்கலம் உடையார் மானியம் புண்ணியகுடி   கிராமங்களின் சுமார் பத்தாயிரம் மக்கள்  இந்த பாலத்தைதான் பயன்படுத்துகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாங்கள் அந்தப்பகுதி மக்கள் மத்தியில் புதியதாக நடை பாலம் கட்ட வேண்டும் என கையெழுத்து இயக்கம் நடத்தவும் நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு கொடுக்கவும் முடிவெடுத்துள்ளோம் என்று கூறினார்.  கட்சியின் நகர செயலாளர் எஸ். ஆறுமுகம் கூறும்போது மன்னார்குடி நகராட்சி 150 ஆண்டுகளை கடந்த வரலாற்று சிறப்பு மிக்க தேர்வு நிலை நகராட்சியாகும் கடந்த 20 ஆண்டுகளில் பெரும்பகுதி அதிமுக-தான் நகர நிர்வாகத்தில் இருந்தது. இந்தப் பாலத்தை மக்கள் பயன்படுத்தும்போது ஏற்படும் அபாயகத்தைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.  கட்சியின்  சார்பில் புதிதாக பாலம் கட்டவேண்டும் என உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினோம். அப்போதும் அதிமுக நிர்வாகம் அசையில்லை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தனது தொகுதி நிதியிலிருந்து இந்தப்பாலத்தை கட்டுவதற்கு நிதி ஒதுக்குவதாக கூறியபோதும் அதிமுக நிர்வாகம் அதை அரசியல் காரணங்களுக்காக மறுத்துவிட்டது.. கடந்த பதினான்கு ஆண்டுகளில்  அதிமுக தனது சுயநல ஊழல் காரணங்களுக்காகவே ஆணையர் பதவியை காலியாக வைத்துக் கொண்டு நகராட்சி பொறியாளர்களை கூடுதல் பொறுப்பாக்கி நிர்வாகத்தை நடத்தியது. அப்போது நகரத்தின் ஏழை எளிய  மக்களின் அடிப்படை தேவைகள் கவனிக்கப்படவில்லை. கர்த்தநாதபுரம் பாலம் உள்பட. இப்போது நகராட்சிக்கு  பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நகராட்சி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். நகர மக்களின் அடிப்படை தேவைகள் அவ்வப்போது கவனிக்கப்பட்டுவருகின்றன. இது ஒரு வித்தியாசமான உண்மையாகும். எனவேதான்  கர்த்தநாதபுரம் மற்றும் வடக்கு கிராமங்களின் முக்கிய தேவையான  புதிய கர்த்தநாதபுரம் நடை பாலத்தின் அவசியம் குறித்து  மக்கள் மத்தியிலும் பிரச்சாரம் கையெழுத்து இயக்கம் நடத்தி பெருந்திரளாக நகராட்சி ஆணையரிடம் மனுக் கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு நகரசெயலாளர் எஸ். ஆறுமுகம் கூறினார். அபாயகரமான நிலையில் உள்ள கர்த்தநாதபுரம்   நடைபாலம் புதிதாக கட்டப்படவேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பாகும். நகர நிர்வாகம் இதை நிறைவேற்றுமா?

………………………நீடா சுப்பையா

Leave a Reply

You must be logged in to post a comment.