சென்னை:
எட்டுவழிச் சுங்கச் சாலைத்திட்டத்தை கைவிட வலியுறுத்தி திருவண்ணாமலையில் நடைபயணமாகத் துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எழுச்சிமிகுப் போராட்டம் 48 மணிநேரம் சிறைவைப்பு, நள்ளிரவில் நடைபயணம், காவல்துறையின் திணறலும் இழுத்தடிப்பும், நீதிபதியின் கேள்விக்கணைகள், நீதிமன்றமே பொறுப்பேற்று கட்சித் தலைவர்களுக்கு ஜாமீன் அளித்து விடுதலை செய்த நிகழ்வு என பரபரப்பு நிமிடங்களாக நகர்ந்து சென்றன. ஒவ்வொரு நிமிடமும், எட்டுவழிச்சாலையை கைவிட்டே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழக அரசுக்கு அளிப்பதாக அமைந்தது. அந்த நிமிடங்கள் அனைத்திலும் தமிழகம் முழுவதும் சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மன்றத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், திருவண்ணாமலையில் நடைபெறும் போராட்டத்தை விளக்கியும், தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனக் கணைகள் எழுப்பியும் ஆர்ப்பாட்டங்கள் நடந்த வண்ணம் இருந்தன.

போராட்டத்தின் நியாயத்தை நீதிமன்றம், காவல்துறைக்கு உணர்த்தியது. எந்தப் போராட்டத்திலும் சட்டத்தை பின்பற்ற வேண்டியது காவல்துறையின் கடமை என்று தமிழக அரசின் தலையில் கொட்டும் விதமாக நீதிபதியின் விமர்சனக் கணைகளும் அமைந்தன.
இத்தகைய எழுச்சியும் சிறப்பும் மிக்க இப்போராட்டத்தின் நிறைவாக, வெள்ளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இயற்கை வளங்களையும் விவசாய நிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்து உருவாக்கப்பட உள்ள சேலம்-சென்னை எட்டு வழிச் சாலையினை கைவிட வேண்டுமெனவும், இதற்காக நிலம் கையகப்படுத்துவது என்ற பெயரில் விவசாயிகளையும், கிராமப்புற மக்களையும் அரக்கத்தனமாக மிரட்டி வரும் அராஜக நடவடிக்கைகளை கைவிட வேண்டுமெனவும் வலியுறுத்தி திருவண்ணாமலையில் இருந்து சேலம் வரை ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7ம ஆம் தேதி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபயணம் நடத்துவது என திட்டமிட்டிருந்த அடிப்படையில், திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1ம் தேதி காலை மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், பெ. சண்முகம், ஏ. லாசர், க. கனகராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் ப. சுந்தரராஜன், ஜி. ஆனந்தன், டி. ரவீந்திரன், பி. சுகந்தி, என். அமிர்தம், ஏ. ஆறுமுக நயினார், என். பாண்டி, எஸ். கண்ணன், டி. ஏழுமலை, இ. சங்கர், ஏ. குமார், எம். சிவக்குமார், பி. ராமமூர்த்தி, என். சுப்பிரமணியன், வி. பிரமிளா, பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் எஸ். ஜெயராமன் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற நடைபயணம் துவங்கியது. உடனடியாக, காவல்துறை நடைபயணத்தை மேற்கொண்டவர்களை தடுத்து வலுக்கட்டாயமாக கைது செய்து, வாகனங்களில் ஏற்றி திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தது.

அன்று இரவு (1.8.18) 12 மணி அளவில் கைது செய்யப்பட்ட ஆண்களையும், பெண்களையும் விடுதலை செய்தவுடன் அந்த இடத்திலிருந்தே மீண்டும் நடைபயணம் துவங்கியது. மீண்டும் காவல்துறை நடைபயணம், மேற்கொண்ட தலைவர்களையும், 13 பெண்கள் உள்பட 90 பேர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். மீண்டும் விடுதலை செய்தாலும், எங்களது நடைபயணம் தொடரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்த 90 பேரையும் ஆகஸ்ட் 2ம் தேதி இரவு 11 மணி அளவில் நீதித்துறை நடுவர்-2 திருவண்ணாமலை முன்பு ஆஜர் படுத்தி ரிமாண்ட் செய்ய வேண்டுமென காவல்துறை கோரியது.

நீதிபதி முன்பு நடைபெற்ற விசாரணை
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நீதிபதி முன்பு, சிபிஐ(எம்) சார்பில் அபிராமன், எம்.ஜெயபாலன், சிபிஐ சார்பில் வி.முத்தையன், மதிமுக சார்பில் எஸ்,எல்.பாபு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் எஸ்.கண்ணன், ஐ.சேகர், எஸ்.பழனி ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகி, “பதிவு செய்யபபட்ட வழக்கு சட்டத்திற்கு புறம்பானது எனவும், நடைபயணத்திற்கு நாங்கள் முறையான அனுமதி கேட்டு 23.7.2018 அன்று காவல்துறை கூடுதல் இயக்குநரிடம் மனு கொடுத்தோம். அவரது உத்தரவின் அடிப்படையில், அன்றிரவே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளருக்கு நடைபயணத்திற்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தோம். உடனடியாக பதில் தெரிவிக்காமல், 29.7.2018 அன்று இரவு திருவண்ணாமலை காவல்துறை ஆய்வாளர் மூலம், 1.8.2018 அன்று நடைபெற உள்ள துவக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து கடிதம் வழங்கப்பட்டது.

எனவே, நடைபயணத்திற்கு எழுத்துப்பூர்வமாக அனுமதி மறுக்கப்படாத நிலையில், நடைபயணத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது சட்டத்திற்கு புறம்பானதாகும். இவ்வாறு கைது செய்தவர்களை சிறையில் அடைத்ததும், நீதிமன்றததில் ஆஜர்படுத்தியுள்ளதும் சட்டத்திற்கு புறம்பானதாகும். எனவே, சட்டவிதிகளுக்கு புறம்பான இந்த வழக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது” என உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளிட்ட பல தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வழக்கறிஞர்கள் அழுத்தமாக வாதிட்டார்கள்.

இவ்வாதங்களை நிராகரிக்க முடியாத நீதிபதி, நள்ளிரவு ஆகிவிட்ட சூழ்நிலையில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை திறந்த கோர்ட்டில் உத்தரவு பிறப்பிப்பதாகவும் அதற்கிடையில், கைதாகியுள்ளவர்கள் சார்பில் ஜாமீன் மனு சமர்ப்பிக்கப்பட்டால் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

நீதிபதி விடுவித்தார்
பதிவு செய்யப்பட்ட வழக்கே தவறானதாக இருக்கும்போது, நாங்கள் ஜாமீன் மனு சமர்ப்பிக்க விரும்பவில்லை எனவும், நீதிமன்றம் மத்திய சிறைக்கு எங்களை ரிமாண்ட செய்தால், சிறைக்குச் செல்ல தயாராக இருப்பதாகவும் கைதாகியுள்ளவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கை தள்ளுபடி செய்து எங்களை விடுதலை செய்வதே சட்டப்படி சரியானது என மீண்டும் வற்புறுத்தப்பட்டது. நள்ளிரவில் சுமார் இரண்டரை மணி நேர வாதத்திற்கு பின்னர், நமது வாதத்தை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தாக்கல் செய்த வழக்கில் முகாந்திரம் ஏதும் இல்லை என்பதால், கைதானவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.
இதன் மூலம், கடந்த இரண்டு நாட்களாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தொடர்ந்து எட்டு வழிச்சாலையை எதிர்த்து நடைபயண இயக்கத்தை முன்னெடுக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம். மேலும், இச்சாலை அமைக்கும் பணியினை மத்திய-மாநில அரசுகள் கைவிடும் வரை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டம் தொடரும் என்பதையும், இத்தகைய போராட்டங்களுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள், விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் அனைவரும் பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

ஆதரவு அளித்த தலைவர்களுக்கு நன்றி
நடைபெற்ற இப்போராட்டத்திற்கு ஆதரவாகவும், தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்தும் அறிக்கை வெளியிட்ட திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன், திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர்களுக்கும், இந்த வழக்கில் இரவு பகல் பாராமல் உழைத்த வழக்கறிஞர்களுக்கும், எட்டுவழி பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கும், தமிழகம் முழுவதும் ஆதரவு தெரிவித்த பல்வேறு அமைப்புகளுக்கும், அரசின் நடவடிக்கையினை கண்டித்து கண்டன இயக்கம் நடத்திய அனைத்து அமைப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave A Reply

%d bloggers like this: