தீக்கதிர்

உரிய ஆவணங்களின்படியே அறநிலையத் துறை அதிகாரி கவிதா கைது : உயர்நீதிமன்றத்தில் பொன்.மாணிக்கவேல் பதில்…!

சென்னை;
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சோமாஸ்கந்தர் சிலை முறைகேடு வழக்கில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா உரிய ஆவணங்களின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

கூடுதல் ஆணையர் கவிதாவின் ஜாமீன் மனு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது.அப்போது ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் நேரில் ஆஜரானார். அப்போது கூடுதல் ஆணையர் அளவிலான அதிகாரியை கைது செய்யும் முன்பு முறையாக விசாரணை நடத்த சம்மன் அனுப்பியிருக்கலாம் என்று நீதிபதிகள் கூறினர்.

அதற்கு பொன். மாணிக்கவேல் பதிலளிக்கையில், கூடுதல் ஆணையருக்கு எதிரான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதால்தான் கைது செய்ததாகவும், அனைத்து ஆவணங்களும் இருந்ததால்தான் விசாரணை நீதிமன்றம் சிறையில் அடைக்க அனுமதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

அது என்ன ஆவணங்கள் என்ற நீதிபதிகளின் கேள்விக்கு, அதனை நீதிமன்றத்தில் வெளிப்படையாக தெரிவிக்க முடியாது என்றும் ஆவணங்களை தாக்கல் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார். திங்கட்கிழமையன்று ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், ஆவணங்கள் திருப்தியளிக்காவிட்டால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினர்.