புதுதில்லி:
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 8 ஆயிரம் கோடி அளவிற்கு கடும் சரிவைச் சந்தித்துள்ளது.2016-17 நிதியாண்டில் இந்தியா, மொத்தம் ரூ. 2 லட்சத்து 37 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால், 2017-18 நிதியாண்டில் அது ரூ. 2 லட்சத்து 30 ஆயிரத்து 56 கோடியாகக் குறைந்துள்ளது.

அண்டை நாடுகளான வங்கதேசம், இலங்கை அளித்த கடும் போட்டி காரணமாகவே இந்தியாவின் ஏற்றுமதி சரிந்து விட்டதாக மத்திய ஜவுளித்துறை இணையமைச்சரான அஜய் தம்தா தெரிவித்துள்ளார்.ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு மற்றும் ரீபண்ட் தாமதம் போன்றவையே ஜவுளி ஏற்றுமதி சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
2015-16 நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதியின் மதிப்பு 17.38 பில்லியன் டாலராக இருந்த நிலையில், 2016-17 நிதியாண்டில் ஜவுளி ஏற்றுமதி மதிப்பு 16.7 பில்லியன் டாலராகக் குறைந்தது. மேலும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு நிலவரமும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை. இதனால், ஜவுளி ஏற்றுமதி 10 சதவிகிதம் வரை சரியக்கூடும் என்றுதான் ஏற்கெனவே மதிப்பிடப்பட்டு இருந்தது. அது தற்போது உண்மையும் ஆகியிருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.