போராட்டக்களத்தில் புதிய வரலாற்றை எழுதிய மார்க்சிஸ்டுகள்..!

கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எட்டுவழிச்சாலையை எதிர்த்து சிபிஎம் ஆகஸ்ட் 1 முதல் நடத்தவிருந்த நடைபயணம் குறித்து பேசினார். அப்போது, ஒன்றாம் தேதி போலீஸ் அனுமதித்தால் போராட்டம் துவங்கும்.தடை விதித்தால் தடையை மீறி போராட்டம் நடக்கும்.கைது செய்தால் கைதாவோம்.மாலையில் விடுவித்தால் விட்ட இடத்திலிருந்தும் மீண்டும் பயணத்தை அப்போதே தொடருவோம் என்றார்.

இது ஏதோ மேடைப்பேச்சுதான்னு பலரும் குறிப்பாக போலீஸ் நினைத்திருக்கக்கூடும். தோழர்களும்கூட நினைத்திருக்கக்கூடும். ஆனால் கட்சியோ இதை நடைமுறைப்படுத்தியே தீருவது என்ற உறுதியோடு களத்திற்கு வந்தது. அரசியல் தலமைக்குழு உறுப்பினர் Ramakrishnan Gopal, தோழர்கள் பாலகிருஷ்ணன், Vasuki Umanath, Kanagaraj Karuppaiah, Shanmugam Perumal , செல்வசிங் என கட்சியின் பாதி செயற்குழுவே திருவண்ணாமலையில் குவிந்தது.

எதிர்பார்த்தபடியே போலீஸ் துவக்க நிகழ்வுக்கே அனுமதி மறுத்தது.இப்படி மறுத்தால் ஒரே நேரத்தில் பல இடங்களிலிருந்து துவங்குவோம் என கட்சி சொன்னது. போலீசுடனான கபடி அங்குதான் துவங்கியது. சரி..நடத்திக்குங்க..ஆனால் நடைபயணத்துக்கு அனுமதியில்லை என்றார்கள். ரைட்..பார்த்துக்கலாம் சார்ன்னு சொல்லிட்டு விடியற்காலையில் மேடை போடுபவரை தட்டியெழுப்பி சின்னதாக ஒரு மேடை போட்டார்கள். கட்சியின் ஆஸ்தான டிசைனராகிவிட்ட Vasanth Prabu வை எழுப்பி அதிகாலையில் பேக்டிராப் பேனர் டிசைன் செய்து அது 10 மணிக்கு மேடைக்கு வந்தது.

ஆனால் மேடை போடுமுன்பே அண்ணா சிலையருகே போலீஸ் குவிக்கப்பட்டுவிட்டது. போலீசின் தண்ணி குடிக்கும் காண்டம் அப்போதே துவங்கிவிட்டது.காலை 9.30 மணிக்கெல்லாம் கலைஞர்கள் மைக்கை பிடித்து வெளுக்கத்தொடங்கினார்கள். எதுக்கு போடுற ரோடு..அந்த பாடையில யாரைக்கொண்டு போக..என ஏகாதசியின் பாட்டை ஒன்ஸ்மோர் கேட்டு உற்சாகமானது கூட்டம்.

தலைவர்கள் வந்ததும் கூட்டம் துவங்கியது.தடையை மீறி பயணம் போவோம் என கே.பி தலைமையில் நடக்கத்துவங்கினார்கள்.நானும்தான். சில மீட்டர் நடந்ததும் போலீஸ் தடுத்து கைது செய்தது.600 க்கும் மேற்பட்டோர் கைதானார்கள். மண்டபத்தில் கொண்டுபோய் அடைத்தது போலீஸ். சரி மாலையில் போய்டுவாங்கன்னு நினைத்த போலீஸ், மாலையானதும் நீங்க போகலாம் என்றார்கள். அப்போதுதான் குண்டை வீசினார் கே.பி. ரைட்டு..நாங்க சொன்னபடி இங்கிருந்தே நடைபயணத்தை தொடங்குகிறோம் என்றார்.

திக்கென ஆயிடுச்சி போலீசுக்கு.இதென்னய்யா..ரிலீஸ் பண்ணா வீட்டுக்கு போவாங்கன்னு பார்த்தால், இவங்க மீண்டும் போராட கெளம்புறாங்களே..இது புதுரகமாயில்ல இருக்கு..என தவித்தார்கள். சரி பேசிக்கலாம்ன்னு சொல்லிட்டு கட்டங்கட்டமா பேசி கடேசில எஸ்.பியே பேச்சுக்கு அழைத்தார். தலைவர்கள் போனார்கள். ஒன்னு எங்க 500 பேரையும் ரிமாண்ட் பண்ணி ஜெயிலுக்கு அனுப்புங்க..அல்லது நாங்க நடைபயணம் போக அனுமதிங்க என்பதே நம் ஒற்றை கோரிக்கை. மீண்டும் நடந்தால் கைது செய்வோம் என்றது போலீஸ். ஓ..தாராளமாக…கைது செய்யிங்க..விட்டால் மீண்டும் நடப்போம்தான்.நடைபயணம் போவது எங்கள் உரிமை.அதில் ஒருபோதும் சமரசமில்லை.. என்றோம். நள்ளிரவு 12 மணிவரை இழுத்தடித்தார்கள்..அப்படி செய்தால் நாமே போய்விடுவோம்ன்னு நினைத்தார்கள்.அதற்கேற்ப காரத்தை வாரிக்கொட்டி ஒரு கிச்சடியை ராத்திரி 10.30 மணிக்கு கொடுத்தனர். நாம யாரு..அதையும் பார்த்துடுவோம்ன்னு தின்று ஏப்பம்விட்டனர் தோழர்கள். அந்நியன் படத்துல பிரகாஷ்ராஜ் சொல்றமாதிரி… யாருய்யா நீங்க..இப்பிடி பண்றீங்களேன்னு திகைத்தது போலீஸ்.

சரி..வேறு வழியில்லையென பணிந்தது போலீஸ்.நள்ளிரவு அனைவரையும் ரிலீஸ் செய்தது. உடனே கே.பி தலைமையில் அந்த நள்ளிரவில் கோஷம் முழங்க பயணம் தொடங்கியது. போராட்ட வரலாற்றில் புதிய ஒரு சரித்திரத்தை அந்த இருளில் எழுதத்துவங்கினர் மார்க்சிஸ்ட்டுகள்…

மீதி அடுத்த பதிவில்…காண்க

கருப்பு கருணா

Leave a Reply

You must be logged in to post a comment.