கடலூர்,
என்எல்சி இந்தியா நிறுவனம் தனது லாபத்தின் 2 விழுக்காட்டை மாவட்ட வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தண்டபானி வலியுறுத்தியுள்ளார்.

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி என்ற மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் தற்போது 5,240 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆண்டிற்கு 3.91 கோடி டன் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. நிறுவனத்தின் வருவாய் 8,496 கோடியாக உள்ளது. இந்நிறுவனம் தனது லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் செலவிட வேண்டும். ஆனால், இந்தத் தொகையை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி இந்தியா நிறுவனம் தனது லாபத்தில் 2 விழுக்காட்டை மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிக்கே செலவிட வேண்டும் என விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக நிறுவனத்திற்கு விரைவில் கடிதம் அனுப்பப்படும். ஏனெனில், நிறுவனத்தின் மின் உற்பத்திக் கான நிலக்கரி முழுவதும் கடலூர் மாவட்டத்திலேயே தான் வெட்டி எடுக்கப்படுகிறது.

எனவே, சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியான 2 விழுக்காட்டை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு செலவிட வேண்டும். அதுவும் மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்கும் பணிகளை செய்ய வேண்டும். என்எல்சியிலிருந்து வெளியேற்றப்படும் நீரை பரவனாற்றில் வெளியேற்றி வாலாஜா ஏரிக்கும் அங்கிருந்து பெருமாள் ஏரிக்கும் அனுப்பி வருகிறது. இந்த நீரில் அதிகமான அளவு கரித்துகள் படிந்திருப்பதால் நீரினை நேரடியாக பயன்படுத்த முடியவில்லை. எனவே, 100 மீட்டருக்கு ஒரு தடுப்பு அமைக்க வேண்டும். இதனால்,  கரித்துகள் ஒவ்வொரு தடுப்புகளிலும் படிந்து ஏரிக்கு நல்ல தண்ணீர் செல்ல முடியும். இதற்கான செலவினத்தை என்எல்சியின் திட்ட மதிப்பீட்டிலிருந்தே செலவிட வேண்டும். இப்பிரச்சனைகள் தொடர்பாக என்எல்சியின் தலைவருக்கு கடிதம் எழுதி நிதியை பெற முயற்சிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.