சென்னை,
மோட்டார் வாகனம் சார்ந்த தொழில்களை முற்றிலுமாக அழிக்கும் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு எதிராக வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என தமிழ்நாடு மோட்டார் வாகன தொழில் பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கே.ஆறுமுகநயினார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மோட்டார் தொழிலை முற்றிலும் கார்ப்பரேட் முதலாளிகள் வசம் ஒப்படைக்கும் நோக்கத்துடன் மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் தனக்குள்ள பெரும் பான்மையை பயன்படுத்தி சட்டத் திருத்தத்தை நிறைவேற்றிவிட்டது. மத்திய அரசின் நோக்கம் வெளிப் பட்ட நிலையில் அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து அந்த சட்ட திருத்தத்தை எதிர்ப்பதால் மாநிலங்களவையில் சட்டத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்போதைய வடிவத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் அரசு போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் அழிக்கப்படும். ஆட்டோ, வாடகை கார், ஒப்பந்த ஊர்திகள் போன்ற அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களே இயக்கும். சாலையோர ஒர்க் ஷாப்புகள், உதிரிப்பாகக் கடைகள், ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் இல்லாமல் போய்விடும். லாரி, சிறிய சரக்கு வாகனங்கள் உட்பட அனைத்து போக்குவரத்து தொழில்களும் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். தனியார் கார், இரு சக்கர வாகனம் வைத்திருப்போர் உட்பட அனைவரும் பாதிப்பிற்குள்ளாவார்கள். வாகனப் பதிவு, எப்.சி, ஓட்டுநர் உரிமம் வழங்குவது போன்ற ஆர்டிஓ அலுவலகங்கள் மூலம் செய்யப்படும் வேலைகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படும். தற்போது மாநில அரசால் வழங்கப்பட்டு வரும் பர்மிட்டுகளுக்கு எதிராக மத்திய அரசும் பர்மிட் வழங்கும். இதன் மூலம் மாநில பர்மிட்டில் இயங்கும் வாகனங்களின் தொழில் நசுக்கப்படும். மாநில உரிமைகளும் பறிக்கப்படும். மேலும் வாகனத்தை பழுதுபார்க்க வேண்டும் என்றால் இனி அந்தந்த நிறுவனத்தில்தான் பழுதுபார்க்க முடியும் என்ற நிலை உருவாகும். ஒருபுறம் 3ஆம் நபர் காப்பீட்டை பல மடங்கு உயர்த்திவிட்டு, சாலை விபத்து நடைபெற் றால் காப்பீட்டு நிறுவனங்கள் 5 லட்ச ரூபாய்க்கு மேல் வழங்க வேண்டியதில்லை என மத்திய அரசு அறிவித்து விட்டது. ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்த 2 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும் என புதிய சட்ட திருத்தம் கூறுகிறது. மேலும் பழைய ஓட்டுநர் உரிமத்தை ஒப்படைத்து விட்டு புதிய பையோ மெட்ரிக் ஓட்டுநர் உரிமத்தை பெற வேண்டும். இந்த சட்ட திருத்தங்கள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக உள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த புதிய சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றன. ஏற்கெனவே சுங்கச்சாவடிகள் கொள்ளை அடித்து வருகின்றன. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தின் போது, மொத்தமாக 19 ஆயிரத்து 500 கோடி ரூபாயை நாங்கள் கட்டி விடுகிறோம். யாரிடமும் சுங்கக் கட்டணம் வசூலிக்காதீர்கள் என கோரிக்கை வைத்தனர். ஆனால் மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தி இந்திய அளவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்ய மத்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில் வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வது என ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி தமிழகத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட லாரி உரிமையாளர் சங்கம், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிறுவன சங்கம், தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சங்கம், இருசக்கர வாகன பராமரிப்பு பணியாளர் சங்கம், நான்கு சக்கர வாகன பராமரிப்பு பணியாளர் சங்கம், கால் டாக்சி சங்கங்கள், சென்னை லோக்கல் லாரி, மணல் லாரி சங்கங்கள், உதிரிபாக விற்பனையாளர் சங்கங்கள், அரசுப் போக்குவரத்து தொழிற் சங்கங்கள் உள்ளிட்ட 25 அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மோட்டார் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இதில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்திருத் தத்திற்கு எதிராக நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு தமிழக மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இச்சந்திப்பின் போது மோட்டார் வாகன சம்மேளன மாநில பொருளாளர் வி.குப்புசாமி, தமிழ்நாடு கால் டாக்சி மற்றும் அனைத்து வகை ஓட்டுநர்கள் சங்கத் தலைவர் பி.ஆர்.சாமி, இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க மாநிலத் தலைவர் ஜானகிராமன், கால்டாக்சி ஓட்டுநர் கள், உரிமையாளர்கள் சங்க (உரிமைக்குரல்) தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.