சென்னை,
சிபிஎம் மாநிலச் செயலாளர் மற்றும் தோழர்களை விடுதலை செய்ய வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சேலத்திற்கான புறவழிச்சாலை அமைப்பை எதிர்த்து திருவண்ணாமலை யிலிருந்து புதனன்று (ஆக. 1) துவங்கிய வழிநடைப் பிரச்சாரம் செய்வதை ஏன் தமிழக காவல்துறையினர் தடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 500 தோழர்களையும் கைது செய்தது. ஜனநாயக நாட்டின் கருத்துரிமை, பேச்சுரிமை, கூடும் உரிமைகள் ஆகிய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கின்ற செயலாகும். வன்முறைகளில் ஈடுபட, அவர்கள் இயக்கம் நடத்தவில்லை; குமுறும் ஏழை, எளிய விவசாயிகள், உழவர்களின் உரிமைக் குரலாய் கிளம்பியுள்ளனர். இதனை ஈர நெஞ்சத்தோடு தமிழக அரசு அணுக வேண்டும்; மக்கள் விரும்பாத, மக்கள் எதிர்க்கின்ற திட்டங்கள் ஒரு போதும் மக்கள் நலத் திட்டங்கள் ஆகா! எனவே மக்களின் ஆதரவினை – ஒப்புதலைப் பெற்று மக்கள் நலத் திட்டங்களில் அரசுகள் ஈடுபடுதலே ஜனநாயக மாண்பினைக் காப்பதாகும். சுமார் 200 கோடிக்கு மேல் மக்கள் வரிப்பணம் செலவில் சேது சமுத்திர கால்வாய்த் திட்டம், சென்னை – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் போன்றவை களை முடிக்க கட்டிய தூண்கள் துருப் பிடிக்கிறதே என்று எண்ணி கவலை கொள்ளும் வண்ணம் தமிழக அரசு, மத்திய அரசினை வற்புறுத்தினால் தமிழ்நாட்டின் வேலை வாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் மேலும் சிறப்படையும் அதில் தமிழக அரசும் முதல்வரும் கவனம் செலுத்துவது அவசர அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.