கோவை,
மருத்துவம் இல்லா பிரசவம் பார்க்க சிறப்பு பயிற்சி முகாம் நடத்த பிரச்சாரம் செய்த ஹுலர் பாஸ்கர் வியாழனன்று கோவையில் கைது செய்யப்பட்டார்.
இயற்கை மருத்துவ முறையை கையான்டு வீட்டிலேயே பிரசவம் பார்க்க முடியும் என்றுகூறி மருந்தில்லா மருத்துவம் என பல்வேறு குழுக்கள் பிரச்சாரம் செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு வராத்திற்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த பெண் கிருத்திகாவை இவரது கணவர் பிரசவம்பார்க்கையில் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், வீட்டில் இருந்தபடியே பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சியரங்கு வரும் 26 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கோவையில் உள்ள கோவைப்புதூர் பகுதியைச் சேர்ந்த நிஷ்டை என்ற நிறுவனத்தின் தலைவர் ஹுலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தியிருந்தார். இதுதொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வு நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் மூலமாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, குனியமுத்தூர் காவல்துறையினர் ஹுலர் பாஸ்கர் மீது (420,511 என்ற பிரிவு) மோசடி செய்து பணம் பறிக்கும் முயற்சி மற்றும் குற்றம் செய்ய முயற்சிசெய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் பானுமதி செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரசவத்தின் போதான உயிரிழப்புகளைக் குறைக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில். மீண்டும் ஒரு திருப்பூர் சம்பவம் நிகழாமல் தடுக்க புகாரளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு பாஸ்கர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இது போன்ற செயல்களை முயற்சிக்க வேண்டாம். பிரசவம் மருத்துவமனைகளில் மட்டுமே நடைபெற வேண்டும், என்றார்.