தரங்கம்பாடி;
நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் கிராமத்தில் அதிமுக பிரமுகர்களால் நடைபெறும் மணல் கொள்ளை குறித்து செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழின் செய்தியாளருக்கு மணல் திருட்டில் ஈடுபட்ட நபர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கட்சியின் மாவட்டச் செயலாளர் நாகை மாலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவிளையாட்டம் கிராமத்தில் உள்ள குழிக்குளம், பிடாரிக்குளம் ஆகிய குளங்களில் கடந்த சில வாரங்களாக அதிமுகவைச் சேர்ந்த கண்ணன், இளையராஜா இருவரும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு இரவு, பகலாக நாளொன்றுக்கு பல நூறு லாரி மற்றும் டிப்பர்களில் மணலை கடத்தி வந்துள்ளனர். இதை மார்க்சிஸ்ட் கட்சி அதிகாரிகளிடம் முறையிட்ட பின்னரும் மணல் கொள்ளை தடுக்கப்படாத நிலையில் சட்டவிரோதமாக இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதை தடுக்க வேண்டுமென 31/07/18 அன்று தீக்கதிரில் செய்தி வெளியானது.

இந்நிலையில் 01/08/18 அன்று மதியம் தீக்கதிர் நாளிதழின் செய்தியாளராக பணியாற்றுகிற ஜான்சன் தேவநேசன் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற அதிமுக பிரமுகர் (மணல் கொள்ளையில் ஈடுபடும்) இளையராஜா, செய்தியாளரின் தாயாரிடம் உன் மகனை கொலை செய்து விடுவேன், என்னை எதிர்த்தே செய்தி போடுவானா? என ஆபாசமாக திட்டிக் கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். மணல் கொள்ளையில் ஈடுபடுவதை குறித்து செய்தி வெளியிட்டதால் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

அதிமுகவைச் சேர்ந்த நபர்களின் அராஜகத்தை தட்டிக் கேட்டாலோ, செய்தி வெளியிட்டாலோ கொலை மிரட்டல் விடுப்பதென்பது ஜனநாயக உரிமையை, பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் விதமாக உள்ளது. உடனடியாக கொலை மிரட்டல் விடுத்துள்ள அதிமுக பிரமுகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டுமென நாகை மாலி வலியுறுத்தியுள்ளார்.
கொலை மிரட்டல் குறித்து மயிலாடுதுறை துணை காவல் துறை கண்காணிப்பாளர், பெரம்பூர் காவல் ஆய்வாளர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: