சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பிரச்சாரப் பயணத்தின் துவக்க நிகழ்ச்சி திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 1 புதனன்று காலை எழுச்சியுடன் நடைபெற்றது.இந்த பயணத்தை துவக்கி வைத்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆற்றிய உரையில் இருந்து:

சாலை அமைப்பதற்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். வளர்ச்சிக்குத் தடையாக இருப்பவர்களும் அல்ல. நாங்கள் கேட்பது 7,000 ஏக்கர் விவசாய விளை நிலம், 156 கிராமங்கள், ஏராளமான பள்ளிக் கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், 7,000 ஏக்கர் வனப்பகுதி – இவற்றை எல்லாம் அழித்துவிட்டு ஒரு சாலை தேவை தானா?

சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு உளுந்தூர்பேட்டை, வாணியம்பாடி, திருவண்ணாமலை ஆகிய மூன்று பாதைகள் உள்ளது. எதற்காக நான்காவது ஒரு பாதை? தேவைப்பட்டால் ஏற்கெனவே இருக்கும் மூன்று சாலைகளையும் விரிவாக்கம் செய்யுங்கள்.
விவசாய நிலங்களையும், மலைகளையும் நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டுத் தான் ஒரு சாலை போட வேண்டுமா?

ஆட்சியாளர்கள் இந்த திட்டத்தை கொண்டு வருவதன் நோக்கமே அவர்களுக்கு எவ்வளவு தொகை கமிஷனாக கிடைக்கும் என்பதுதான்.இதுகுறித்து சமூக வலைதளங்களில் உலா வந்த ஒரு நகைச்சுவையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். “இந்த ரோடு போட்டால் எவ்வளவு கமிஷன் கிடைக்கும்” என்று நடிகர் சத்யராஜ் மற்றொரு நகைச்சுவை நடிகரிடம் கேட்க, அவரோ 40 விழுக்காடு கிடைக்கும் என்று கூற, “அப்டினா போக ஒரு ரோடு; வர ஒரு ரோடு போடு” என்கிறார்.

இப்படித் தான் இன்றைய மாநில அரசு ஒரு கமிஷன் ஏஜெண்ட் போல செயல்படும் அரசாக மாறிவிட்டது.மக்களின் உரிமைக்காகப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இதை ஒருபோதும் அனுமதிக்காது.ஆளும் கட்சியினர் தங்கள் ஆட்சியின் ‘சாதனைகளை’ விளக்கி பிரச்சாரம் செய்யும்போது, தமிழக மக்களின் வேதனைகளை விளக்கி பிரச்சாரம் செய்வதற்கு எங்களுக்கும் உரிமை உண்டு.அந்த அடிப்படையில்தான், ‘என் நிலம் – என் உரிமை’ என்ற கொள்கை முழக்கத்துடன் நாங்கள் பிரச்சாரம் செய்கிறோம்.

ராணி சிவகாமி சாம்ராஜ்யம் அல்ல!
கடந்த காலங்களில் ஜனநாயக உரிமைகள் இல்லை. மன்னர்கள் ஆட்சியில் அவர் போட்டது தான் சட்டம். எழுதப்பட்ட அரசியல் சாசனம் எதுவும் கிடையாது.” நான் சொல்வதுதான் கட்டளை என் கட்டளையே சாசனம்” என்று திரைப்படத்தில் வருகிற ராணி சிவகாமி பேசுவதைப் போல் அன்றைக்கு சாம்ராஜ்ய சக்ரவர்த்திகள் பேசினார்கள்.
பிறகு, பிரிட்டிஷ் ஆட்சி வந்தது. அன்றைய தினம் விடுதலைக்காக போராடிய கம்யூனிஸ்ட்டுகள் சதிகாரர்களாக சித்தரிக்கப்பட்டு சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டனர்.

கட்சித் தலைவர்கள் மீது எண்ணற்ற பொய் வழக்குகள் போடப்பட்டன. அதையெல்லாம் முறியடித்து விடுதலை பெற்றுக் கொடுத்தனர். இந்த வரலாறு பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் எடப்பாடிக்கும் தெரியவில்லை. இவர்கள் இருவரும் கடந்தகால மன்னர் ஆட்சி என்று இப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன? எந்த இடத்தில் அரசு என்ன செய்தாலும் விமர்சிக்கவே கூடாது. மாற்றுக் கருத்து தெரிவிக்கக் கூடாது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கும் போகவே கூடாது. இப்படி கட்டளை போடுகிறது தமிழக அரசும் காவல் துறையும். இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது?

திருடனுக்கு தேள் கொட்டிய கதை :                                                                                                              சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்,பெ.சண்முகம் பேசியதில் இருந்து...                                                      “தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசாங்கம் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு விவசாயிகள் யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; 99 விழுக்காடு விவசாயிகள் தாங்க ளாகவே முன் வந்து 8 வழிச் சாலை அமைப்பதற்கு தாராளமாக நிலம் கொடுத்திருக்கிறார்கள்;ஆனால் சில அரசியல் கட்சிகளும் சில அமைப்பு களும் அந்த மக்களையும் தூண்டிவிட்டு மாநில அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்” என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலும் பொது நிகழ்ச்சிகளிலும் கட்சிப் பொதுக் கூட்டங்களிலும் பேசி வருகிறார்.இதில் ஒரு துளியும் உண்மை இல்லை என்பதைகள நிலவரங்கள் உணர்த்துகின்றன. இந்த திட்டத்திற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதால், திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக விழி பிதுங்கி நிற்கும் எடப்பாடி அரசு, எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தால் கூட கைது செய்து சிறையிலடைத்து வருகிறது.ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக மத்திய அரசின் எஜமானர்களுக்கு சேவகம் செய்து வரும் எடப்பாடி அரசுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த ‘என் நிலம் – என் உரிமை’ என்ற பிரச்சாரம் நடைபயணத்தை அறிவித்தது.

 

நீங்கள் பொய் சொல்லுங்கள் நாங்கள் உண்மையைச் சொல்கிறோம்..!                                         சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசியதில் இருந்து……                                                                          நாட்டில் எத்தனையோ சாலைகள் போடப் பட்டுள்ளன. தமிழகத்தில் இந்த எட்டு வழிச்சாலைக்கு மட்டும் எதிர்ப்பு ஏன் வருகிறது?  தமிழகத்தில் சாலையே இல்லாமல் வரலாற்றில் முதல் முறையாகவா சாலை போடப்படுகிறது? அப்படி ஒன்றும் இல்லை.இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி இந்த 8 வழிச்சாலைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி கடிதம் கொடுக்கிறார். அடுத்த நாள் காலை யில் அனுமதி கிடைத்து விடுகிறது. வேறு எந்த திட்டத்திற்காகவாவது இந்த அளவுக்கு வேகம் காட்டப்பட்டு இருக்கிறதா? அதே சமயம், ஏராளமான திட்டங் களுக்கு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால்,எந்த ஒரு திட்டத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் மின்னல் வேகத்தில் அனுமதி கொடுத்த வரலாறு கிடையாது.எட்டு வழிச்சாலையை மிக விரைவாக வும் வேகமாகவும் செய்து முடிக்க வேண்டும் என்பதில் தமிழக அரசும் மத்திய அரசும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் பாதித்த தென்னை விவசாயிகளுக்கு ஒரு மரத்திற்கு 100 ரூபாய் கேட்டதையே மாநில அரசும் மாவட்ட நிர்வாகமும் இது வரைக்கும் தரவில்லை. ஆனால், 8 வழிச்சாலைக்காக நிலத்தை ஆக்கிரமிக்கும் திருவண்ணாமலை ஆட்சி யர் ஒரு தென்னை மரத்துக்கு ரூ.80, 000 நட்டஈடு கொடுப்பதாக குறைதீர் கூட்டத்தில் தெரிவித் திருக்கிறார். சேலம் மாவட்ட ஆட்சியரோ ஒரு தென்னை மரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய்
தருவதாக சொல்லி இருக்கிறார்.

ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரி வித்திருக்கிறார்.உண்மையில் இப்படி நடக்குமா? மாவட்ட ஆட்சியர்களும் முதலமைச் சரும் இப்படி உண்மைக்கு மாறாக பிரச்சாரம் செய்யும்போது, இந்த திட்டம் நிறைவேற்றப்படுமானால் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவுக்கு தள்ளப்படும் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கும் இருக்கிறது. இதை உரக்க சொல்வதற்குத்தான் இந்த பிரச்சாரம்.

Leave a Reply

You must be logged in to post a comment.