===எஸ்.ஜனகராஜன், நீரியல் நிபுணர்=====
உலகத்தில் வேறெங்கும் இல்லாத அளவிற்கு சென்னையில் இன்னும் சில ஆண்டுகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் வர உள்ளன. தொழில்நுட்பம் என்பது அரசாங்கத்திடம் இல்லை. தொழில்நுட்பம் இருந்தால், நாட்டு, மாநில மக்களுக்கு தேவையான பாலங்கள், அணைகள் கட்டப் பயன்படுத்தலாம்.

ஜனநாயக அரசு (Democratic State) என்றால் அது மக்களுக்கு நன்மையை மட்டுமே செய்யக்கூடியது. ஆனால் இங்கே ரூ. 28 முதல் ரூ.30 ஆயிரம் கோடி வரை மதுபானக் கடைகளை நடத்துவதற்கும் ஒதுக்க வேண்டியவர்களுக்கு ஒதுக்கி விட்டும், மக்கள் பணத்தை எடுத்தே மக்களுக்கு சிற்சில காரியங்களைச் செய்யும் அரசாக தமிழக அரசு உள்ளது.
தற்போது பெரும் பிரச்சனையாக இருப்பது வேளாண்மை, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு போன்றவைதான். ஆனால் மதுபானம் விற்பனை உள்ளிட்டவற்றுக்கு பணத்தை ஒதுக்கியது போக, மீதமிருந்தால் பணத்தை சுற்றுப்புறச் சூழலுக்கும், வேளாண்மைக்கும் தமிழக அரசு ஒதுக்குகிறது.

தமிழ்நாட்டில் 60 சதவீதம் பேர் விவசாயிகள். அதில் 80 சதவீதம் பேர் சிறு,குறு விவசாயிகள், ஏழை விவசாயிகள். இவர்களுக்கு என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
தற்சமயம் தமிழக சுற்றுச்சூழல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுத்தமான ஆறுகள் இல்லை, நல்ல ஆழ்துளைக் குழாய்கள் இல்லை, கடல் உள்வாங்குகிறது. கடல் நீர் மிகவும் உப்புத்தன்மையுடன் இருக்கிறது. மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. நீர்நிலைகள் அழிந்து கொண்டிருக்கின்றன.

சேலம் – சென்னை எட்டு வழிச்சாலைக்காக (இன்னும் பல வழிச்சாலைகளை அமைக்கப் போவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்). விவசாயிகளின் நிலங்கள் பறிக்கப்படுகின்றன.

விவசாயம் என்பது விவசாயிகளின் வாழ்க்கையோடு ஒன்றிணைந்த உணர்வுப்பூர்வமான தொழில். அது அவர்களின் பண்பாடு, கலாச்சாரம், வாழ்க்கை. தமிழக அரசு அந்த உணர்வுகளை கட்டுப்படுத்துகிறது. இது முற்றிலும் தவறான அணுகுமுறை. ஒரு விவசாயியிடம் இருந்து நிலத்தைப் பெற முடிவு செய்தால், அந்த விவசாயிக்கு முறையான ஆலோசனைகள், அவர்கள் எந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள், குடும்பப் பின்னணி என்ன, பெண்கள் – குழந்தைகளின் நிலை, மருத்துவ உதவிகள் ஏதேனும் தேவையா என்பன உட்பட அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். இதை சமூக பொருளாதாரமாக மட்டும் பார்க்கக் கூடாது. விவசாயக் குடும்பங்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு நிறுவனம் அல்லது அரசு, விவசாயிகளிடம் நிலத்தை வாங்க விரும்புகிறது என்றால், அவரிடம் நிலத்தை கொடுக்க விருப்பமா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். ஒருவேளை, நிலத்தை கொடுக்க ஒப்புக் கொண்டால், அந்நிலத்திற்கான அன்றைய சந்தை மதிப்பு (Current Market Value) என்னவோ அதற்குரிய முழு பணத்தையும் வழங்க வேண்டும் அல்லது அதற்கு ஈடான இழப்பீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் அது குற்றம். இம்முறையை அரசு பின்பற்றுகிறதா? மாறாக, அந்த விவசாயிகளிடம், நாங்கள் வாங்கியுள்ள இந்த நிலத்திற்கு இழப்பீடு பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது நாங்கள் அமைக்கும் தொழிற்சாலை போன்ற கட்டிடங்களுக்கு பங்குதாரராக வேண்டும் (share holder) என்று கூறுவது முற்றிலும் அநியாயமான ஒன்று.

சிறு விவசாயிகளின் நிலத்தை வாங்குவது என்று ஒரு நிறுவனம் அல்லது அரசு முடிவு செய்தால், அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். அவ்வாறு செய்யாமல், விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொண்டு, அதில் வரும் லாபம் அனைத்தையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்றால் நாம் அதை கவனிக்க வேண்டும். பல வருட கடின உழைப்பினால் வாங்கிய அந்த சிறு விவசாயியின் நிலத்தை பெற்றுக் கொண்டு, அதில் வரும் லாபங்கள் அனைத்தையும் நாங்களே வைத்துக் கொள்வோம் என்றால் அது எந்தவகையில் நியாயமாகும். அந்த விவசாயியின் நிலை என்னவாகும்?

நிலத்தை வழங்கும் அந்த விவசாயி, கால்நடைகளை அந்நிலத்தில்தான் மேய்ச்சலுக்கு விடுவார். நிலம் இல்லாமல் கால்நடைகளை மட்டும் வைத்து அந்த விவசாயி என்ன செய்வார்? மேய்ச்சல் நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுவிட்டால், அவர்களது கால்நடைகளுக்கான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்குரிய பணத்தை அவருக்கு கொடுத்தாலும் அதனால் என்ன பயன்?

ஒரு சாலை அமைக்கப்போகிறோம் என்றால், அதன் பொருளாதார மதிப்பு, ஏற்கெனவே எத்தனை சாலைகள் உள்ளன, மாற்றுச்சாலைகள் இருக்கிறதா, இதனால் யாருக்கு பயன் என்பன உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசிடம் இரண்டு வகையிலான அணுகுமுறைகள் உள்ளன. அவை, விவசாயிகளிடம் அணுகுவது(farmers approach), பொதுமக்களிடம் அணுகுவது(people approach). இந்த இரு முறைகளிலும் அரசு அவர்களின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, அவர்களை அழுத்திக் கொண்டிருக்கிறது. இதனால் மிக முக்கியமான ஒன்று பெண்கள் மற்றும் குழந்தைகள் கல்வி உள்பட அனைத்திலும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்கள், சாலைகள், பாலங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட நூறு சதவீதம் 1971 முதல் 2014 ஆம் ஆண்டு வரை காலக்கட்டங்களில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நிலங்கள்தான். இது தமிழ்நாடு முழுவதும் தற்போதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வளர்ந்த மேற்கத்திய நாடுகளில், இதுபோன்று விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பெறுவதென்றால், அந்த நில உரிமையாளருக்கான அனைத்து இழப்பீடுகளும் வழங்கப்பட்டு விடும். நிலத்தை வழங்கும் விவசாயிகளுக்கு அந்நாடுகளில் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

ஒரு மலையை குடைந்து ஏதேனும் கட்டடம் கட்ட வேண்டுமென்றால், அந்த மலையை குடைவதால் என்னனென்ன பாதிப்புகள் (நிலத்தடி நீர், விலங்குகள் வாழ்விடங்கள் பாதிப்பு உட்பட) ஏற்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்று நாம் வேலைக்குச் செல்கிறோம். நாளை அந்த வேலை இல்லை என்ற சூழல் வந்தால், மனரீதியிலான பாதிப்பு அதிகம் இருக்கும். அதுபோன்றுதான், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிப்பதால், அவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, மனரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்பதே உண்மை.

Leave A Reply

%d bloggers like this: