திருவண்ணாமலை:
எட்டு வழி சாலைக்கு எதிராக திருவண்ணாமலையிலிருந்து சேலம் நோக்கி நள்ளிரவில் மீண்டும் நடைபயணம் சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் உள்ளிட்ட 90 பேரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்தனர்.

விவசாயத்தையும், இயற்கை வளங்களையும் அழித்து, மக்களுக்கு பயன் அளிக்காத வகையில் எட்டு வழி சுங்கச் சாலை அமைப்பதை கண்டித்து ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று திருவண்ணாமலையிலிருந்து சேலம் வரை 170 கி.மீ. நடைபயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பேரெழுச்சியுடன் துவக்கியது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்ட இந்த நடைபயணத்தை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர் பல்வேறு மண்டபங்களில் அடைத்து வைத்திருந்தனர்.

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
பின்னர் புதன் மாலை 6 மணிக்கு தண்டராம்பட்டு சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு வந்தபோது அனைவரையும் விடுதலை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விடுதலை செய்தாலும் மீண்டும் நடைபயணத்தைத் தொடர்வதாக ஏற்கெனவே அறிவித்தபடி கட்சித் தலைவர்கள் மீண்டும் பயணத்தைத் துவக்க தயாராகினர். இதனையடுத்து, கட்சித் தலைவர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.பி. சக்கரவர்த்தி, கூடுதல் கண்காணிப்பாளர் அசோக்குமார் ஆகியோர் நடபயணத்தை கைவிடுமாறு கேட்டுகொண்டனர். ஆனால், அதற்கு உடன்படவில்லை. இதனால், இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது.

நள்ளிரவில் பிரச்சாரம்-கைது!
பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு விடுவித்தவுடன், தலைவர்களும் அனைத்து தோழர்களும் மீண்டும் நடைபயணத்தை மேற்கொண்டனர். சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சென்றனர். அதற்குள் காவல்துறையினர் மீண்டும் அவர்களை கைது செய்து அதே திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

கட்சியின் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மத்தியகுழு உறுப்பினர் உ.வாசுகி, செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என். பாண்டி, டி. ரவீந்திரன், பி. டில்லிபாபு, பி. சுகந்தி, வி. பிரமிளா, என். அமிர்தம், மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார் ஆகியோர் தலைமையில் 13 பெண்கள் உள்பட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

திக்குமுக்காடிய காவல்துறை
கைது செய்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளை இரண்டாவது நாளாக வியாழனன்றும் திருமண மண்டபத்திலேயே சிறைவைத்த காவல்துறையினர் பல கட்ட பேச்சு நடத்தினர். ஒவ்வொரு முறையும் நடைபயணத்தை கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். ஆனால், அதற்கு உடன்படாத சிபிஎம் தலைவர்கள்,“ நீங்கள் எத்தனை முறை கைது செய்து விடுதலை செய்தாலும் சேலத்தை நோக்கிய எங்கள் நடைபயணத்தை நிறுத்தமாட்டோம்” என்று உறுதிபடத் தெரிவித்தனர். இதனால் காவல்துறையினர் திக்குமுக்காடினர்.

பயணம் தொடரும்
முன்னதாக, நள்ளிரவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கே. பாலகிருஷ்ணன்,“ எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, அது விரும்பும் யோசனைகளை அமல்படுத்த துடிக்கிறது. பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தெருமுனைக் கூட்டம் நடத்த அனுமதி மறுக்கிறது. துண்டுப்பிரசுரம் விநியோகிக்கக் கூட முடியாத அளவிற்கு, புதிய உத்திகளை புகுத்துகிறது” என்றார்.

எட்டு வழிச் சாலை திட்டத்தின் பாதிப்பு என்ன என்பது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கடமை மார்க்சிஸ்ட் கட்சிக்கு உள்ளது. அதை அனுமதிக்க மறுத்தால் கம்யூனிஸ்டுகள் வேடிக்கை பார்க்கமாட்டார்கள். இன்றைய போராட்டம் வரலாற்று சிறப்புமிக்க போராட்டமாகும். ஐந்து மாவட்ட மக்களை பாதுகாக்க தொடர்ந்து நடைபயணத்தை நடத்துவோம் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

அஞ்சமாட்டோம்!
கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன்,“8 வழி சாலை அமைப்பதை கண்டித்து நாங்கள் நடத்தும் இந்த பிரச்சார பயணம் வெற்றி பெற்றால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி ஏற்படும். இதனால்தான் தமிழக அரசும், காவல்துறையும் தடுக்கிறது. கைது நடவடிக்கைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் அஞ்சாது” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.