திருப்பூர்,
திருப்பூர் மாநகராட்சி, ஐந்து நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் சொத்து வரியை நூறு சதவிகிதம் வரை உயர்த்தும் முடிவை மாற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளாட்சி அலுவலர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழக அரசு சொத்து வரியை தானடித்த மூப்பாக நூறு சதவிகிதம் வரை உயர்த்தி அறிவித்திருக்கும் நிலையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களிடமும் அந்தந்த பகுதி மார்க்சிஸ்ட் கட்சியினர் சார்பில் வரிக்குறைப்புச் செய்ய கோரிக்கை மனு அளிப்பதென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயற்குழு தீர்மானித்திருந்தது. குறிப்பாக தொழில், விவசாய நெருக்கடி, பேருந்து கட்டணம் உள்ளிட்ட விலைவாசி உயர்வு ஆகியவற்றால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். அதேசமயம் மாநகரம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி என எல்லா பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் முழுமையாக சீராக இல்லாத நிலையும், குப்பை அகற்றம், சாக்கடை சுத்தம் செய்வது, தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சிப் பணிகளும் முழுமையாக சீர்குலைந்து காணப்படுகின்றன. இந்த விசயங்களை பூர்த்தி செய்வதற்கு எனச் சொல்லி ஒவ்வொரு முறையும் வரியையும், கட்டணத்தையும் உள்ளாட்சி நிர்வாகங்கள் உயர்த்தினாலும், மக்களுக்கான சுமை மட்டும் கூடுகிறது, வளர்ச்சிப் பணிகள் தேங்கியே கிடக்கின்றன.

எனவே சொத்து வரியை குறைக்க வேண்டும். உள்ளாட்சிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தர வேண்டிய மானியத்தை முழுமையாக வழங்கி மக்களுக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. வியாழனன்று திருப்பூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.உண்ணிகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால், வடக்கு மாநகரச் செயலாளர் பி.முருகேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர் கே.பழனிசாமி, வேலம்பாளையம் நகரச் செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் சுமார் 50 பேர் மாநகராட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு மாநகர பொறியாளர் ரவியை சந்தித்து கோரிக்கை மனு அளித்து, தற்போதுள்ள நிலையில் வரி உயர்வு ஏற்க முடியாதது. எனவே இந்த சொத்து வரி உயர்வைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதேபோல் மாநகராட்சி மட்டுமின்றி திருப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் இந்த சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. உண்ணிகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சி. மூர்த்தி, வடக்கு ஒன்றியச் செயலாளர் கே. பழனிச்சாமி உள்ளிட்டோர் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து சொத்து வரியை குறைக்க கோரிக்கை மனு கொடுத்தனர். பல்லடம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையரிடமும், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய ஆணையரிடமும் பல்லடம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் சொத்து வரி உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் ப.கு.சத்தியமூர்த்தி, பல்லடம் ஒன்றியச் செயலாளர் ஆர்.பரமசிவம், ஒன்றியக்குழு உறுப்பினர் அஸ்ரப், ராஜேந்திரன் மற்றும் பழனிசாமி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

ஊத்துக்குளி பேரூராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிராக மனு கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், தாலுகா செயலாளர் சிவசாமி, மாவட்ட குழு உறுப்பினர் சரஸ்வதி, தாலுகா குழு உறுப்பினர்கள் வி.கே.பழனிசாமி, முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குன்னத்தூர் பேரூராட்சியில் சொத்துவரி,குடிநீர் கட்டணம் உயர்வை ரத்து செய்யக் கோரி பேரூராட்சி அலுவலரிடம் நகர கிளைச் செயலாளர் சின்னச்சாமி, ச.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் மனு கொடுத்தனர். உடுமலை நகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தனர். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் எஸ்.ஆர். மதுசூதனண் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இது போல் தாராபுரம், பொங்கலூர் உள்பட பல்வேறு உள்ளாட்சி நிர்வாகங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் இதுபோல் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: