கோயம்புத்தூர்,
கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட கிரைண்டர் உற்பத்தி நிறுவனங்களும் 300க்கும் மேற்பட்ட உதிரிபாகங் கள் தயாரிப்பு நிறுவனங்களும் உள்ளன.

மத்திய அரசு “ ஒரே நாடு, ஒரே வரி’’ என்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் அனைத்துப் பொருட்களின் விலையும் குறையும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் பல்வேறு பொருட்களின் விலை முன்பைவிட அதிக அளவில் உயர்ந்தது. அதில் பாதிக்கப்பட்ட தொழில்களில் ஒன்று,  கிரைண்டர் உற்பத்தி தொழில். இந்தத் தொழிலில் இரண்டு வித வரிகளை மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் அடிப்படை உணவான கோதுமை அரைக்கப் பயன்படுத்தப் படும் கிரைண்டருக்கு 5 சதவீத வரியும் தென்மாவட்டங்களின் முக்கிய உணவான அரிசியை அரைக்கப் பயன்படுத்தப்படும் கிரைண்டருக்கு 12 சதவீதமும் வரியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரே தேவையை நிறைவு செய்யும் பொருட்களுக்கு இரண்டு வித வரிகள் விதிக்கப்பட்டுள்ளதால், உற்பத்தியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது போன்ற வரி மாற்றத்தால் வட மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கிரைண்டர்கள் இங்குக் குறைந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

மக்களும் குறைந்த விலையில் கிடைப்பதால் அதை வாங்கவே முற்படுகின்றனர். எனவே இங்கு உற்பத்தியாகும் கிரைண்டர்களின் விற்பனை குறையும். இதனால் தொழிலாளர்களின் வேலை பாதிக்கப்படும். மேலும் இந்த வரிவிதிப்பால் முன்பு இருந்த விலையை விட கிரைண்டர்களின் விலை 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதால் விற்பனையும் குறைந்துவிட்டது. உற்பத்தி வரி 28 விழுக்காடும் விற்பனை வரி 12 விழுக்காடும் உள்ளது. உலர்ந்த பொருட்களை அரைக்க பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது போல இட்லி தோசைக்கு ஊற வைத்த அரிசியை அரைக்க உதவும் கிரைண்டர்களுக்கும் வரிவிலக்கு அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் நாடு முழுவதும் ஒரே வரியை விதிக்க வேண்டும் என்று கிரைண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கிரைண்டர் உற்பத்தியாளர் பாண்டியன் கூறுகையில், பல ஆண்டுகளாகப் போராடி, கடந்த 2008 ஆம் ஆண்டு 12 விழுக்காடாக இருந்த வாட்வரியை 5 விழுக்காடாகக் குறைத்தோம். ஆனால் இந்த ஜி.எஸ்.டி வரிக்குப் பின் 5 விழுக்காட்டில் இருந்து 28 விழுக்காடாக உயர்த்தியது அதிர்ச்சி அளித்தது. வட மாநிலங்களில் தயாரிக்கப்படும் “ஆட்டா சக்கி” என்னும் கிரைண்டர்களுக்கு 5 விழுக்காடு மட்டுமே வரி உள்ளது. கிரைண்டர்களின் உதிரிபாகங்களுக்கு 18 சதவீதம் என்ற அதிக வரியை 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். குறுந்தொழில்களின் வரம்பை 25 லட்சத்தில் இருந்து 5 கோடியாக உயர்த்தியுள்ளதால் கோவையைச் சுற்றியுள்ள அனைத்துக் குறுந்தொழில்களும் பாதிக்கும். எனவே இதைத் திரும்ப பெற வேண்டும். தமிழகத்தில் தயாரிக்கப்படும் கிரைண்டர்களுக்கும் ஆட்டா சகிக்கு இணையான ஜி.எஸ்.டி யை அமல்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.