சென்னை;
சென்னையிலிருந்து சேலம் செல்வதற்கு ஏற்கனவே மூன்று சாலைகள் உள்ள போது புதிதாக எட்டு வழி சுங்கச்சாலை தேவையில்லை என பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகள் – இதர பகுதி மக்கள் மற்றும் அனைத்து எதிர்கட்சிகளும் கடுமையாக ஆட்சேபித்து வருகின்றனர். ஆனால், மாநில அரசு பிடிவாதமாக திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து வருகிறது.

7000 ஏக்கர் விளை நிலம் சாலைக்காக எடுக்கப்படுகிறது. சுமார் 1000 ஏக்கர் வன நிலங்கள் அழிக்கப்படுகின்றன. இந்த சாலை கட்டுமானத்தால் 159 கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன; சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகிறது.

8 வழிச்சுங்கச்சாலையின் பாதிப்புகளை விளக்கி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு நடைபயண பிரச்சாரம் செய்வதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 23.07.2018 அன்று அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், அனுமதி மறுப்பு கடிதத்தை காவல்துறையினர் 29.07.2018 அன்று மாலையில்தான் கொடுத்தார்கள். அனுமதி கோரி நீதிமன்றத்திற்கு செல்ல முடியாத விதத்தில், காவல்துறை தாமதமாக அனுமதி மறுத்திருக்கிறது.

கைது
இந்நிலையில், மக்கள் நலனை காக்க திட்டமிட்ட அடிப்படையில், ஆகஸ்ட் 1- அன்று நடைபயணம் துவக்கிய போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப. செல்வசிங், ஏ. லாசர், பெ. சண்முகம், க. கனகராஜ் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டு 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

நள்ளிரவில் மீண்டும் நடைபயணம்
பின்னர், கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் மாநிலத் தலைவர்கள் உள்பட அனைவரும் நடைபயணத்தை மீண்டும் துவக்கிய போது, 13 பெண்கள் உள்ளிட்டு 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறை முனைந்துள்ளது.

ஆளுங்கட்சியின் சார்பாக சாதனை விளக்க சைக்கிள் பிரச்சாரத்தை அமைச்சரே துவக்கி வைத்திருக்கிறார். ஆனால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜனநாயகப் பூர்வமான நடைபயண இயக்கத்திற்கு மாநில அரசு அனுமதி மறுத்ததோடு கைதும் செய்திருக்கிறது.
நடைபயண இயக்கத்திற்கு ஜனநாயக விரோதமாக அனுமதி மறுத்து கைது செய்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

வலுவான குரலெழுப்புக!
எட்டு வழி சுங்கச்சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கக் கூடாது, அரசின் திட்டத்தை விமர்சிக்கக் கூடாது, எதிர்க்கக் கூடாது என்ற மாநில அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்தும், அரசின் திட்டத்தை எதிர்த்து இயக்கம் நடத்திடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்ததை கண்டித்து வலுவான குரலெழுப்புமாறு அனைத்து ஜனநாயக சக்திகளையும், அனைத்துப் பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.