கோவை,
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்து போடப்படும் எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். கைது செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆவேச ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் இயற்கை வளத்தை அழித்து சென்னை முதல் சேலம் வரை எட்டு வழிச்சாலை அமைக்கும் வேலையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பிரதான சாலைகள் இப்பகுதியில் உள்ள நிலையில் அவசியமற்ற இச்சாலை திட்டத்திற்கு மத்திய அரசின் தூண்டுதலோடு தமிழக அரசு செயல்படுத்த துடிக்கிறது. கார்ப்ரேட்டுகள் சுங்கச்சாவடி அமைத்து வசூல் செய்வதற்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக புதனன்று திருவண்ணாமலையில் துவங்கி சேலம் வரையில் நடைபயணம் மேற்கொள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். இந்த நடைபயணத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரை கைது செய்துள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி.இராமமுர்த்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், ஏ.ராதிகா, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.கருணாகரன், எழுத்தாளர் பாலமுருகன், சிங்கை நகரக்குழு செயலாளர் வி.தெய்வேந்திரன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இதில் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி, செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், வி.பெருமாள், ஆர்.வேலுசாமி, அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதில் எடப்பாடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் எட்டு வழிச்சாலையா எடப்பாடிக்கு சாலையா, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதை ஒருபோதும் மார்க்சிஸ்ட் கட்சி அனுமதிக்காது. கைது செய்தவர்களை விடுதலை செய், தடைகளை உடைத்து நடைபயணம் மேற்கொள்வோம் என்கிற ஆவேச முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக கோவை பீளமேடு பகுதியில் இருந்து ஏராளமான மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் செங்கொடியை ஏந்தி எடப்பாடி அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.

இதேபோல கோவை அன்னூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் அன்னூர் பயனியர் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் அன்னூர் ஒன்றியச் செயலாளர் முகமதுமுசீர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியராஜ், மணிகன்டன், சரவணன் மற்றும் கபீர் உள்ளிட்டஏராளமானோர் பங்கேற்று எடப்பாடி அரசிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

திருப்பூர்:
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி அவிநாசி தாலுகா குழு செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உண்ணிகிருஷ்ணன், வடக்கு ஒன்றியச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல், தாராபுரத்தில் அண்ணாசிலை முன்பு நகர கிளைச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் என்.கனகராஜ், விவசாயிகள் சங்கதாலுகா தலைவர் ஆர்.வெங்கட்ராமன், சிஐடியு நிர்வாகிகள் பி.பொன்னுச்சாமி, என்.முத்துச்சாமி, கோவிந்த ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையும், மாநில அரசையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதில் செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி, எம்.சேதுமாதவன், எம்.குணசேகரன், மேற்கு வட்டச் செயலாளர் எம்.கனகராஜ், தாலுகா செயலாளர் சுந்தரம், கிழக்கு மாநகர செயலாளர் பி.ரமணி, உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு
ஈரோடு மாவட்டம், சத்தி மலை கமிட்டி சார்பில் கடம்பூர் பேருந்து நிறுத்தம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலை கமிட்டி செயலாளர் சி.துரைசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, நிர்வாகிகள் சடையலிங்கம், தாயம்மாள், ராசப்பன், பி.சடையப்பன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் கெம்புராஜ் தலைமை வகித்தார். முனுசாமி,மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கோபி காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நகர செயலாளர் ஆறுமுகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் நாமக்கல் பூங்கா சாலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச குழு உறுப்பினர் பெருமாள் தலைமை வகித்தார். இதில் ரங்கசாமி, சதாசிவம் மற்றும் பிரதேச குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நாமகிரிப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே ஒன்றியச் செயலாளர் சின்னுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையத்தில் ஒன்றியச் செயலாளர் ஆர்.ரவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கோவிந்தராஜ் உட்பட ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

Leave A Reply

%d bloggers like this: