வாஷிங்டன்;
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிகமிக நெருங்கிய ராணுவ கூட்டாளியாக – ஏகாதிபத்தியத்தின் ராணுவ தேவைகளுக்கும் நோக்கங்களுக்கும் சேவை செய்கிற ஏவலாளியாக மிக மோசமான முறையில் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவிடம் நரேந்திர மோடி அரசு அடகு வைத்துவிட்டது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு குற்றம் சாற்றியதை மேலும் நிருபிக்கும் விதத்தில் அமெரிக்க நாடாளுமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவுகளை போடத் துவங்கியிருக்கிறது.டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்ட மசோதாவின்படி, அமெரிக்காவின் மிக நெருங்கிய, மிகப்பெரிய ராணுவ கூட்டாளி என்று இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை தனது ராணுவ நோக்கங்களுக்காக வளைப்பதற்கு தேவையான செலவுகளை செய்வதற்காக நடப்பு நிதியாண்டில் அமெரிக்க ராணுவ பட்ஜெட்டில் 716 பிரில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யவும் அந்நாட்டின் நாடாளுமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.

2016ல் ஒபாமா ஆட்சி நடந்த போது அமெரிக்காவின் முக்கிய ராணுவ கூட்டாளி என்ற அந்தஸ்து இந்தியாவுக்கு அளிக்கப்பட்டது. எனினும் அதற்கான வரையறைகளும் நடைமுறைகளும் உருவாக்கப்படவில்லை. இந்நிலையில் டிரம்ப் நிர்வாகம் ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் தனது ராணுவ நோக்கங்களுக்காக இந்தியாவை ஒரு ஏவலாளியாக பயன்படுத்துவது என்று திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறது. இதற்கான அங்கீகாரத்தை டிரம்ப் நிர்வாகத்திற்கு அளிப்பதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் செனட் உறுப்பினர் ஜான் எஸ் மெக்கெய்ன் என்பவரால் முன்மொழியப்பட்ட மசோதாவான “ஜான் மெக்கெய்ன் தேசிய பாதுகாப்பு அங்கீகார சட்டம்” எனும் மசோதா முன்மொழியப்பட்டு விவாதிக்கப்பட்டு புதனன்று செனட் சபையிலும் மக்கள் சபையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டால் அது சட்டமாகிவிடும்.

இந்த மசோதாவின்படி அமெரிக்க ராணுவமும் இந்தியாவின் முப்படைகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு போர்கள், பயிற்சிகள், தளவாட பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்திலும் கூட்டாக செயல்படும். இந்திய படைகள் ஒட்டு மொத்த தகவல்களும் அமெரிக்க ராணுவத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும். தொழில்நுட்ப உதவி என்ற பெயரில் இந்தியாவின் ராணுவ கட்டமைப்பை அமெரிக்காவே வடிவமைப்பதற்கும் வழிவகுக்கப்படும்.

இந்த மசோதாவின் பிரதான நோக்கம் இந்திய பெருங்கடல் பிரதேசத்திலும், பாரசீக வளைகுடாவிலும் மேற்கு பசிபிக் பிராந்தியத்திலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஏவல் படையாக இந்திய ராணுவப்படைகளை செயல்பட வைப்பதுதான். அதுமட்டுமல்ல, ஏற்கெனவே அமெரிக்காவின் மிக நெருங்கிய ராணுவ கூட்டாளிகளாக செயல்படுகிற ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் இணைந்து போர் பயிற்சிகள், அமெரிக்க படைகளுக்கு தேவையான சேவகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் செய்வதற்கும் இம்மசோதா வழிவகுக்கிறது.தொடர்ச்சியாக அமெரிக்க பயணங்கள் மேற்கொண்ட பாஜக அரசின் பிரதமர் நரேந்திர மோடி அளித்த ஒப்புதல்களின் அடிப்படையிலேயே, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ராணுவ கைப்பாவையாக மாற்றுவதற்கு வழி செய்யும் இந்த நாசகர மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலமாக வளைகுடா பிரதேசத்தில் தனக்கு பணியாத ஈரான், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கெதிராகவும், இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் தனது வல்லாதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ளவும் பசிபிக் பிரதேசத்தில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் வடகொரியாவுக்கு எதிராக இந்தியப் படைகளை வெறுப்பதும் அமெரிக்க ஏகாதிபத்தியம் சூழ்ச்சி வலை பின்னியுள்ளது. அந்த சூழ்ச்சிக்கு மோடி அரசும் இரையாகியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.