புதுதில்லி;
தமிழகத்தைச் சேர்ந்த, அச்சு மற்றும் காட்சி ஊடக முதலாளிகளை தில்லிக்கு அழைத்து, பிரதமர் மோடி விருந்து வைத்துள்ளார்.

2019-ஆம் ஆண்டின் துவக்கத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றிபெற்று எப்படியாவது மீண்டும் ஆட்சியை தக்க வைத்துவிட வேண்டும் என்று இப்போதே மோடியும் அமித்ஷாவும் வேலையைத் துவங்கி விட்டனர். இதற்காக, இந்தியாவின் பிரபலமான நடிகர்- நடிகைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதேபோல செய்திப் பத்திரிகைகள், தொலைக்காட்சி செய்தி சேனல்களையும் வளைத்துப்போட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த அச்சு மற்றும் காட்சி ஊடக முதலாளிகளை சரிக்கட்டும் பொறுப்பு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொடுக்கப்பட்டு, அவர் ஒரு மாதத்திற்கு முன்பே, சென்னையில் ஊடக முதலாளிகள் மற்றும் செய்தி ஆசிரியர்களை சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்தார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மையத்திற்கு பிரதமர் மோடி வந்தபோது, ஊடக முதலாளிகளை நேரிலேயே அழைத்துச் சென்று மோடியைச் சந்திக்க வைத்தார்.
தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஊடக முதலாளிகள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் தில்லிக்கே அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு பிரதமர் மோடி கையால் விருந்தளித்து உபசரிக்கப்பட்டுள்ளனர். இந்த விருந்தின்போது, முன்னணி தொலைக்காட்சி முதலாளிகளுடன் மோடி தனிப்பட்ட முறையிலும் பேசியுள்ளார்.தினமலர் முதலாளிகள் ஆதிமூலம், ரமேஷ், கோபால்ஜி, விகடன் உரிமையாளர் சீனிவாசன், இந்து நாளிதழின் ராம், குமுதம் வார இதழின் வரதராஜன், தினமணி செய்தி ஆசிரியர் வைத்தியநாதன், புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன், நியூஸ் 18 தலைமை செய்தி ஆசிரியர் குணசேகரன், தந்தி டிவி உரிமையாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மகன் ஆதித்யன், பாலிமர் டிவி உரிமையாளர் கல்யாண சுந்தரம், நியூஸ் 7 செய்தியாளர் தில்லை, வின் டிவி உரிமையாளர் தேவநாதன் என சுமார் 22 பேர், தில்லி நாடாளுமன்ற வளாக அலுவலத்தில் பிரதமர் மோடி அளித்த விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: