மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிராகவன் மீது  தேசிய பாதுகாப்பு பிரிவில் போடப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற  மதுரைக் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஊர்வலம் சென்ற போது காவல்துறை கலவரத்தை ஏற்படுத்தி 13 பேரை சுட்டுக் கொன்றது. இந்த  கலவரத்தை தூண்டியதாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த சட்ட ஆலோசகர் வாஞ்சிநாதன் மற்றும் வழக்குறிஞர் ஹரிராகவன் ஆகியோர் மீது தூத்துக்குடி சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வாஞ்சிநாதன், ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, நீதிமன்றத்தில் சரணடைந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய நிர்வாகி வழக்குறிஞர் ஹரிராகவன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக ஹரிராகவன் மீது 92 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  இந்த வழக்குகளிலிருந்து  கடந்த 24-ம் தேதி ஜாமீன் பெற்ற நிலையில் 26-ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்  காவல்துறை ஹரிராகவனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது.

இதையடுத்து வழக்கறிஞர் ஹரிராகவனின் மனைவி சத்தியபாமா மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முறையீடு செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷிர் அகமது அமர்வு,  ஏற்கனவே ஹரிராகவன் வழக்கில் ஜாமீன் வழங்கியிருக்கும் நிலையில் ?  எதற்காக மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.  தமிழகத்தில் நடப்பது ஜனநாயக ஆட்சியா? போலீஸ சர்வாதிகார ஆட்சியா? என்று  கேள்வி எழுப்பியதோடு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என த்தரவிட்டிருந்தனர்.

அதன் படி இன்று காலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் தந்தூரி உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.  விசாரணையின் போது  அரசு தரப்பில் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் வழக்குபதிவு செய்வதற்கான ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் ஜூலை 20 -ம் தேதியே போலீஸ் தரப்பில் கொடுக்கபட்டது எனவும், ஆனால் மாவட்ட ஆட்சியர் 26- ம் தேதி தான் கையெழுத்திட்டார் எனவும் கூறபட்டது.

இதனைகேட்ட நீதிபதிகள் ‘‘ஒரு மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து தனி நபரின் தலையெழுத்தை மாற்றிவிடும், குற்றம்சாட்டபட்டவர்கள் தேவையில்லாமல் பல மாதங்கள் வரை சிறையில் இருக்கும் சூழ்நிலை நேரிடும். இது தனிநபரின் சுதந்திரத்தை பாதிப்பதாகும்.எனவே வரும்காலங்களில் இதுபோன்ற உத்தரவுகளை பிறபிக்கும்போது அப்போதைய சூழ்நிலைகளை தெரிந்துகொண்டு முடிவெடுக்க வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கலவரத்தில் வழக்கறிஞர் ஹரிராகவன் மீது தேசிய பாதுகாப்பு சட்ட வழக்கு பதிவை ரத்து செய்து வழக்கினை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

 

Leave a Reply

You must be logged in to post a comment.