செயின்ட் கிட்ஸ் :                                                                                                                                                                       டெஸ்ட், ஒருநாள், டி-20 என மூன்று வகையான போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வங்கதேச கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை விண்டீஸ் அணியும், 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேச அணியும் கைப்பற்றியது.

இந்நிலையில், மூன்று போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி செயின்ட் கிட்ஸில் செவ்வாயன்று (இந்திய நேரப்படி நள்ளிரவு) நடைபெற்றது. டாஸ் வென்ற விண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க வீரர்கள் தமிம் இக்பால் (0), சவுமியா சர்கார்(0) ஆகியோரை விண்டீஸ் வீரர் நர்ஸ் வெளியேற்ற வங்கதேச வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மஹமதுல்லாவின் இறுதிக்கட்ட அதிரடியால் (35 ரன்கள்) வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் விண்டீஸ் அணி களமிறங்கியது. களமிறங்கும் தருணத்தில் கனமழை பெய்ததால் ஆட்டம் நீண்ட நேரம் தடைபட்டது. மழைநின்ற பின் டக் வொர்த் லூயிஸ் விதிப்படி விண்டீஸ் அணியின் வெற்றி இலக்காக 11 ஓவரில் 91 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

சற்று கடினமான இலக்காக இருந்தாலும் அந்த்ரே ரஸல் (35 ரன்கள்), சாமுவேல்ஸ் (26 ரன்கள்) ஆகியோரின் அதிரடியால் 9.1 ஓவரிலேயே 93 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆட்டநாயனாக விண்டீஸ் வீரர் அந்த்ரே ரஸல் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி-20 போட்டி வரும் 4-ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெறுகிறது.

Leave A Reply

%d bloggers like this: