மும்பை;
பணவீக்கம் காரணமாக, மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 0.25 சதவிகிதம் உயர்த்தி 6.50 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. இதனால் வீட்டுக்கடன் உள்ளிட்ட பிற கடன்களுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம், ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது. இதுபோலவே வர்த்தக வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ என அழைக்கப்படுகிறது.
பணவீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டு இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகிறது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் உள்ளிட்டவற்றை முடிவு செய்யும் கூட்டம் புதனன்று நடைபெற்றது. அதன்முடிவில், ரெப்போ ரேட்டை 0.25 சதவிகிதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.இதன்படி, ரெப்போ ரேட் 6.50 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரெப்போ ரேட் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 6.25 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இது, மேலும் 0.25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு 6.50 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ரிவர்ஸ் ரெப்போ ரேட் விகிதம் 6.25 சதவிகிதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு, தற்போதுதான் அடுத்தடுத்து இரண்டு முறை ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.பணவீக்க விகிதத்தைக் கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின் 2-ஆவது அரையாண்டில் பணவீக்க விகிதம் 4.8 சதவிகிதமாகவும், 2019- 2020 நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்க விகிதம் 5.0 சதவிகிதமாகவும் உயர வாய்ப்பு இருப்பதாக ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.

ரெப்போ ரேட் உயர்த்தப்பட்டுள்ளதால் வர்த்தக வங்கிகள் வழங்கும் வீட்டுக்கடன், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடனுக்கான வட்டி விகிதங்களும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: