திருவண்ணாமலை;
சென்னை – சேலம் 8 வழிச் சாலையை கைவிட வலியுறுத்தி ‘என் நிலம் – என் உரிமை’ என்ற முழக்கத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எழுச்சிமிகு நடைபயணம் (ஆகஸ்ட் 1) புதனன்று காலை காவல்துறையின் தடைகளை தகர்த்தெறிந்து மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் புறப்பட்டது. நடைபயணம் புறப்பட்ட சிறிது தூரத்திலேயே தடுத்துநிறுத்திய காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
இந்தப் பிரச்சார பயணத்திற்கு அனுமதி கேட்டு முன்கூட்டியே காவல்துறையிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், அனுமதி இல்லை என்று ஒரு நாள் முன்னதாக தெரிவித்த காவல்துறை அதற்கான நகலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக்குழு அலுவலக கதவில் ஒட்டி விட்டுச் சென்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த பிரச்சார பயணத்தை எப்படியும் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாவட்ட நிர்வாகமும் மாநில அரசும் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டன. ஆனால், திட்டமிட்டபடி போராட்டத்தை நடத்தியே தீருவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. இதையடுத்து ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு முதல் திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல் துறையின் கெடுபிடிகள் அதிகமானது.

கூட்டத்திற்கு மட்டும் அனுமதி
இந்நிலையில், புதனன்று (ஆகஸ்ட் 1) காலை 7 மணி முதல் திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து போராட்டம் துவங்கும் அண்ணா சாலை வரை காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களை சந்தித்த காவல்துறையினர் கூட்டம் நடத்திக் கொள்வதற்கு மட்டும் அனுமதிப்பதாகவும் நடைபயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் தெரிவித்தனர். “ நாங்கள் திட்டமிட்டபடி நடைபயணத்தை நடத்தியே தீருவோம்’ என்று தலைவர்கள் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்வதற்காக காவல்துறை வாகனங்களும் சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
பிரச்சார நடைபயணம் துவங்கும் அண்ணா சாலை அருகில் இருந்து சுமார் 10 இடங்களில் தடுப்பு வேலிகளை அமைத்து ஆங்காங்கே காவல்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் ஏராளமான போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள். பல்வேறு கெடுபிடிகளுக்கிடையே காலை 8 மணி முதல் வெளியூர்களில் இருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் தொண்டர்கள் திருவண்ணாமலை நோக்கி வரத்தொடங்கினர்.

அச்சுறுத்திய காவல்துறை
துவக்க நிகழ்ச்சி நடைபெறும் அண்ணா சாலை உள்ளிட்ட நான்கு சாலைகளிலும் போக்குவரத்தை தடை செய்த காவல்துறையினர், சாலைகளின் இருபுறமும் வரிசையாக வாகனங்களை நிறுத்தி வைத்து தடைகளை ஏற்படுத்தினர். மேலும் ஏராளமான போலீசாரை குவித்து அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால், எத்தகைய மிரட்டலுக்கும் அஞ்சமாட்டோம் என்பதை காவல்துறைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தமிழக அரசுக்கும் உணர்த்தும் வகையில் நடைபயண பிரச்சாரப் பயணத்தின் தொடக்கமாக புதுவை சப்தர்ஹாஸ்மி, சென்னை பாரதி கலைக்குழுவினர் போர் முழக்கப் பாடல்களை பாடினர்.

போர் முழக்கம்
சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு பிறகு தலைவர்கள் மேடை ஏறியதும் அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களது எழுச்சிமிகு முழக்கத்துடன் கூட்டம் துவங்கியது. திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். எம்.வீரபத்திரன் வரவேற்றார்.

கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், பெ.சண்முகம், ஏ.லாசர். க.கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர்கள் என்.பாண்டி, டி.ரவீந்திரன், பி.டில்லிபாபு, பி.சுகந்தி, வி.பிரமிளா, மாவட்டச் செயலாளர்கள் டி.ஆறுமுகம் (கடலூர்) , த.ஏழுமலை (விழுப்புரம் வடக்கு) என்.சுப்பிரமணியன் (விழுப்புரம் தெற்கு) இ. சங்கர் (காஞ்சிபுரம்) குமார் (தருமபுரி) , ராமமூர்த்தி (சேலம்) ஜெயராமன் (கிருஷ்ணகிரி) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நடைபயணம்
தொடக்க நிகழ்ச்சி முடிந்ததும் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்து நடைபயண பிரச்சாரத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தலைவர்கள் முதலில் செல்ல அவர்களைப் பின்தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் அணிவகுத்தனர். சிறிது தூரம் சென்றதும் அவர்களை காவல்துறையினர் மேலும் முன்னேற விடாமல் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். காவல்துறையினரின் தடுப்புகளை மீறி தலைவர்களும் தொண்டர்களும் சென்ற போது அவர்களை மறித்து அனைவரையும் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். சாலைமறியல்
காவல்துறையினரின் அராஜகத்தை கண்டித்து தலைவர்களும் கட்சித்தொண்டர்களும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்தது. அப்போது காவல்துறையினருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து, நடைபயணத்தில் பங்கேற்ற அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து போலீஸ் வாகனத்திலும் அரசு பேருந்துகளிலும் ஏற்றிச் சென்று பல்வேறு இடங்களில் உள்ள 4 மண்டபங்களில் அடைத்துவைத்தனர். 4 மணிநேரத்திற்கு பிறகு அனைவரையும் ஒரே மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.

கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை
நடை பயணத்திற்கு தலைமை ஏற்றுப்பேசிய கட்சியின் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், எங்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் விடுதலை செய்தவுடன் அங்கிருந்து நடைபயணம் தொடரும் என்றார். காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் எவ்வளவு முறை தடைகளை ஏற்படுத்தினாலும் அதை தகர்த்து நடைபயணம் தொடரும் என்றும் அவர் எச்சரித்தார்.

ரூ.1000 நன்கொடை
முன்னதாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நடத்திவரும் அறக்கட்டளை நிர்வாகிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த பிரச்சார நடை பயணத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினர். துவக்க நிகழச்சியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், விழுப்புரம் வடக்கு, தெற்கு, புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.