திருவாரூர்;
திருவாரூர் நகராட்சி பகுதியில் வசித்து வருபவர் கே.தெட்சிணாமூர்த்தி. இவர் திரு.வி.க அரசு கலைக்கல்லூரியின் மிகச் சிறந்த மாணவர் ஆவார். இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவராகவும் பணியாற்றி கல்லூரி நலன், பேராசிரியர்கள் நலன், மாணவர்கள் நலன் என அனைத்திற்குமாக போராடியவர். முதுகலை பட்டப்படிப்பில் இணைந்து படிக்க வேண்டிய அவரை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர் சங்க மாநிலக்குழு மாணவர் தெட்சிணாமூர்த்தி கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட செயலாளர் இரா.சுர்ஜித் ஆகியோர் தெரிவித்திருப்பதாவது:
தற்போது கல்லூரி நிர்வாகத்தினால் பழிவாங்கப்பட்டுள்ள கே.தெட்சிணாமூர்த்தி ஆங்கில வழியில் பி.ஏ வரலாறு இளங்கலையில் 76 சதவீத மதிப்பெண்களுடன் உச்ச முதல் மாணவராக திகழ்கிறார். இவருக்கு முதுகலை வரலாற்று பாடப்பிரிவில் சேர்ந்து படிப்பதற்கு திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரி முதல்வரும், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்களும் மறுத்துள்ளனர். முதுகலை வரலாறு ஆங்கில வழியில் படிப்பதற்காக விண்ணப்பித்த அவருக்கு ஜூலை 10-ஆம் தேதியன்று “கல்லூரி அமைதியை சீர்குலைத்ததாகவும், போராட்டங்களுக்கு மாணவர்களை தூண்டுவதாகவும்” கூறி கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என கல்லூரி நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளது. கல்லூரி முதல்வர் கே.கீதா மற்றும் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் இராஜாராமன் (விலங்கியல் துறை), அழகன் (ஆங்கிலம்), நாகேந்திரன் (பொருளாதாரம்), அஜீதா (தமிழ்), ராமு (வணிகவியல்), இராஜேந்திரன் (வரலாறு) உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளது.

தலைவர்கள் சந்திப்பு
இந்த கடிதம் குறித்து அறிந்ததும் மாணவர் சங்க முன்னணி தலைவர்கள், கல்லூரி கிளை நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து தகுதிவாய்ந்த மாணவர் தெட்சிணாமூர்த்திக்கு இடம் வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளனர். அதன்பிறகு திடீரென ஜூலை 18-ஆம் தேதியன்று கலந்தாய்வு நடைபெற்றுள்ளது. அப்போது மீண்டும் சென்று கேட்டபோது 26ஆம் தேதியன்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது, அன்றைய தினம் வாருங்கள் என கல்லூரி முதல்வர் கூறினார். மாணவர் சங்கத் தலைவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக மறுநாளே (ஜூலை-19) அன்று துறைவாரியாக கல்லூரி அறைகளின் கதவுகளை சாத்திக்கொண்டு வெளிப்படைத்தன்மையில்லாமல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனை அறிந்த தெட்சிணாமூர்த்தி உள்ளிட்ட மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் சென்று நியாயம் கேட்டுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த கல்லூரி முதல்வர் அன்றைய தினமே திருவாரூர் ஊரக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல்துறையின் நடவடிக்கை
எதிலும் வேகமாக செயல்படாத காவல்துறை இந்த பிரச்சனையில் விரைந்து செயல்பட்டு விரைவாக முதல் தகவல் அறிக்கை உருவாக்கி 20 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கி கொண்டிருந்த தெட்சிணாமூர்த்தியை கைது செய்தனர். மற்ற மாணவர்களிடம் தேடுதல் என்ற பெயரில் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் மற்ற காவலர்களுடன் அராஜகமாகவும், கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டார். அன்று மாலையே குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பாக மாணவர் தெட்சிணாமூர்த்தியை காவலர்கள் முன்னிலைப்படுத்தினார்கள்.

இந்த முதல் தகவல் அறிக்கையை படித்த நீதிபதி தனது அதிருப்தியை தெரிவித்தார்.
மாணவர் படிக்கும் கல்லூரிக்குள் அவர் செல்வதை அத்துமீறி நுழைந்தார் என நீங்கள் கூறுவது எப்படி சரியாகும் என காவலர்களை கேள்வி கேட்டார். இதன்பிறகு சிறிது அவகாசம் கேட்டுக் கொண்ட காவல்துறை கல்லூரி நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை கட்டிட மற்றும் பராமரிப்பு துறையிடமிருந்தும் கூடுதலான புகார்களை அவசரமாக பெற்று பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாக கூடுதல் பிரிவுகளில் வழக்கு தொடுத்து உடனடியாக பிணையில் வரமுடியாத அளவிற்கு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி ஒரு மாணவரின் எதிர்காலம் குறித்து உங்களுக்கு கவலை இல்லையா என கேட்டுவிட்டு வேறு வழியில்லாமல் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் மாணவர் தெட்சிணாமூர்த்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாணவர் தெட்சிணாமூர்த்தி நன்னிலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சாதிய அக்கறை
பாதிக்கப்பட்ட மாணவர் தெட்சிணாமூர்த்திக்கு நீதி கிடைக்கவும் முதுகலை பட்டப்படிப்பில் அவரை சேர்ப்பதற்கும் தாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலக்குழுவின் வழிகாட்டுதலின் படி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்குவோம் என்றும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர் தெட்சிணாமூர்த்தி பல போராட்டங்களை முன்னின்று நடத்தியிருந்தாலும் அவர்மீது எந்தவொரு வழக்கும் இல்லை என்பது அவரது அறவழி போராட்டத்திற்கு உதாரணமாகும். இந்திய மாணவர் சங்கமும் “படிப்போம் – போராடுவோம்” என்ற முழக்கத்தோடு மாணவர்களின் தரமான கல்விக்காகவும், வளமான எதிர்காலத்திற்காகவும், ஒட்டுமொத்த கல்லூரி நலனிற்காகவும் போராடும் இந்திய மாணவர் சங்கம் கல்லூரி நிர்வாகத்தின் அநீதிக்கு எதிராகவும், காவல்துறையின் பொய் வழக்கிற்கு எதிராகவும் போராடி வெற்றி பெறும். போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.