சென்னை;
தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கு உரமாக இருப்பவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார்.
சேலம்- சென்னை எட்டுவழி சங்கச்சாலை திட்டத்திற்காக கட்டாயப்படுத்தி விவசாய நிலங்களை அரசு பறித்து வருவதை கண்டித்து திருவண்ணாமலையில் புதனன்று (ஆக.1 ) துவங்கிய நடைபயணத்தின் போது அவர் பேசியது வருமாறு:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நடைபயணத்தை தடுத்துநிறுத்த காவல்துறை செவ்வாயன்று இரவு முதல் தயாராக இருந்தது. சிறைக்கு செல்ல நாங்களும் தயாராகத்தான் அணிதிரண்டு வந்துள்ளோம். 9 ஆயிரம் கோடி ரூபாயை திருடி விட்டு லண்டனில் ஒளிந்து கொண்டிருக்கும் விஜய் மல்லையாவை கொண்டுவர படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அங்கிருந்து கொண்டு மல்லையா கேட்கிற கேள்விக்கெல்லாம் அரசு பதிலளித்துக் கொண்டிருக்கிறது. போகிற போக்கைப் பார்த்தால் மல்லையா கேட்கிற வசதிகளையெல்லாம் செய்து கொடுப்பார்கள் போல் தெரிகிறது. எடப்பாடியின் ஆட்சியில் நாட்டில் இருப்பதை விட சிறையில் இருப்பது எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. நாங்கள் என்ன சமூக விரோத செயலிலா ஈடுபடுகிறோம் எங்களை கைது செய்ய? கைது செய்து மாலையில் விடுதலை செய்தாலும் அங்கிருந்து எங்களது நடைபயணம் தொடரும். திட்டமிட்டபடி சேலத்திற்கு செல்வோம் இல்லையேல் வேலூர் மத்திய சிறைக்குச் செல்வோம்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற ஒரு வருமான வரிச்சோதனையில் ஒரு ஒப்பந்ததாரர் வீட்டில் இருந்து ரூ. 600 கோடி பணத்தையும், 300 கிலோ தங்கத்தையும் எடுத்துள்ளளனர். குப்பைத் தொட்டியில் இருந்து கோடி கோடியாய் எடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரையாவது சிறைக்கு அனுப்பினீர்களா? தமிழகத்தின் வளர்ச்சி மீது அக்கறை இல்லாதவர்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி மீது புழுதிவாரி தூற்றுகிறார்கள். உண்மை என்ன?

கம்யூனிஸ்ட்டுகள் சிந்திய ரத்தத்தில்தான் தமிழகத்தில் வளர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. உண்மையான வளர்ச்சிக்கு உரமாக இருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள். வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். இது குறித்து விவாதிக்க தயாரா? கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி இல்லையென்றால் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் வந்திருக்குமா?

11ஆயிரம் கோடி ரூபாய்க்கு காவிரி மேம்பாட்டு திட்டத்தை ஜெயலலிதா உருவாக்கினார். அதற்கு மத்திய அரசு நிதி ஒதுக்கினால் டெல்டா வளமானதாக மாறும். 35ஆயிரத்திற்கு மேற்பட்ட நீர்நிலைகள் ஆழப்படுத்தி பராமரித்து நீர்த்தேக்க 10 ஆயிரம் கோடி ஒதுக்கினால் தண்ணீர் பற்றாக்குறை தீரும். வளர்ச்சிக்கு இப்படியான திட்டங்கள் இருக்கும்போது ரோடு போட்டாதான் வளர்ச்சி வரும் என்று சொல்லுவது ஏமாற்றுவேலையல்லவா?

காவல்துறையினர் அரசாங்கத்தின் கையாளாக செயல்படாதீர்கள். காவல்துறைக்கென்று சட்ட விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும். ஆளும் கட்சி அமைச்சர் சைக்கிள் பயணம் நடத்தினால் எஸ்பி-யும், டிஐஜியும் பாதுகாப்புக்கு செல்கிறார்கள். வழிநெடுகிலும் காவல்துறை போக்குவரத்து சரி செய்து தருகிறது. 5ஆயிரம் சைக்கிளில் பேரணி போவதை விட நாங்கள் நடைபயணம் செய்வதில் என்ன இடையூறு இருக்கிறது? சட்டம் – ஒழுங்கு கெடும் என்று நிரூபிக்க முடியுமா? இந்த நடைபயணம் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோடிக்கணக்கான மக்களின் உள்ளார்ந்த ஆதரவோடு இந்த நடைபயணம் நடக்கிறது.
இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.